கோவை: “ஒன்றியம், திராவிட மாடல் போன்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்த பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை சாய்பாபா காலனி அவைத் தலைவர் ரமேஷின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணம் போக்குவரத்து விதிமீறல். குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் இயங்குவதே காரணம். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சிதான் மாறியுள்ளதே தவிர, எந்தக் காட்சிகளும் மாறவில்லை. ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை. ஒன்றியம், திராவிட மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லாமே இங்கு அரசியல்தான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விசராணைக் கைதிகளை கொல்லும் நிலை உள்ளது.
தெருவுக்கு 10 டாஸ்மாக் திறக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொலுசு, பணம் அளித்ததை தவிர வேறென்ன செய்தார் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும். சாலை வசதி, சாக்கடை வசதி எனும் எதுவும் இங்கு சரியில்லை. மக்கள் தெளிவானால்தான் எல்லாமே இங்கு மாறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.