ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரது பிறந்த நாள் நினைவுக்கு வரும்போது மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம்.
அதுவே தனக்கு நெருக்கமானவர் தான் பிறந்த அதே நாளில் பிறந்திருந்தால் அது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கும்.
ஆனால் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு ஒரே நாளில் பிறந்த நாள் வந்தால் எப்படி இருக்கும்?.
நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தால் உண்மையில் இந்த சந்தோசத்தை அனுபவிக்கும் குடும்பத்தினருக்கு சொல்லவே வேண்டாம்.
அப்படி ஒரு குடும்பம் கேரள மாநிலம் கண்ணூர், பட்டுவம் பகுதியில் உள்ளனர். இந்த ஊரை சேர்ந்தவர் அனீஷ்குமார். 1980 மே மாதம் 25-ந் தேதி பிறந்தவர். இவர் வாலிப பருவத்தை எட்டியதும் வேலைக்காக வளைகுடா நாட்டிற்கு சென்றார்.
பருவ வயதை எட்டியதும் அவருக்கும் அஜிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அஜிதா 1987-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பிறந்திருந்தார். இந்த ஒற்றுமையை அறிந்து குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர்.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம்.
அனீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் 2012-ம் ஆண்டு மகள் பிறந்தார். ஆச்சரியம் என்னவென்றால், கணவன்-மனைவி இருவரின் பிறந்த நாளான மே 25-ந் தேதியே மகளும் பிறந்தது தான்.
அடுத்த 7 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனும் மே 25-ந்தேதி பிறந்த போதுதான் குடும்பத்தினர் இந்த ஒற்றுமையை அறிந்து வியப்பின் எல்லைக்கே சென்றனர்.
இது பற்றி அனீஷ் குமார் கூறும்போது, இது எதேச்சையாக நடந்தது. இதற்காக நாங்கள் எந்த திட்டமிடலும் செய்யவில்லை. மனைவி கர்ப்பமாக இருந்த போது ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தோம். அவர் நாள் குறித்து கொடுத்தார். சுக பிரசவம் தான் நடந்தது.
நான், மனைவி, மகள், மகன் என 4 பேருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்கிறது. பிறந்த நாளை நாங்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடுவோம், என்றார். இவர்களை குடும்பத்தினர் மட்டுமல்ல அந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஆச்சரியமாகவே பார்த்து ரசிக்கிறார்கள்.