சென்னை:
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக இருந்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி.
இந்திய அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திகழ்ந்த அவர் மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல்வேறு புதுமைகளுக்கும், மாற்றங்களுக்கும் வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக அவர் பதவி வகித்து உள்ளார். 60 ஆண்டுகள் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். இளம் வயதில் இருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தடவைகளிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
தி.மு.க. தலைவராகவும் அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து சாதனை படைத்து உள்ளார். கட்சியிலும், ஆட்சியிலும், நிர்வாகத்தில் ஏராளமான சாதனைகள் செய்த நிகரற்ற சாதனையாளராக அவர் திகழ்ந்தார். 3 தடவை ஜனாதிபதி வேட்பாளர் தேர்விலும் முக்கிய பங்கு வகித்தார்.
பன்முக திறமையாளராக விளங்கிய கருணாநிதி முதுமை காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 3-ந் தேதி அவருக்கு நூற்றாண்டு பிறந்த தினம் தொடங்குகிறது.
இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதோடு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டு உள்ளது. ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கருணாநிதி சிலை இதுவரை நிறுவப்பட்ட கருணாநிதி சிலைகளில் மிகப்பெரியதாகும். இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்புரையாற்றுகிறார். கருணாநிதியின் சிறப்புகளை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டுவார்.
அரை நூற்றாண்டுகால தமிழக அரசின் மையமாக திகழ்ந்த கருணாநிதி அரசியல், சினிமா, இலக்கியம், நாடகம் என்று தொட்ட துறைகள் அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர் என்பதை வெங்கையா நாயுடு தனது பேச்சில் குறிப்பிட உள்ளார்.
விழாவில் கருணாநிதி பற்றிய சிறப்பு காணொலி திரையிடப்பட உள்ளது. இறுதியில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு நன்றி கூறுகிறார். விழாவில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
விழாவை முன்னிட்டு கலைவாணர் அரங்கில்சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா நிகழ்ச்சிகளை சுமார் 2 ஆயிரம் பேர் நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரங்கத்தின் கீழ் தளத்தில் 1200 பேர் அமர வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதுபோல அரங்கத்தின் முதல்மாடியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக 500 இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. அங்கிருந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு எல்.இ.டி. பெரிய திரை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலைவாணர் அரங்கம் பகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். இதையடுத்து அண்ணாசாலை மற்றும் கலைவாணர் அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.