Duraimurugan speech at Karunanidhi statue unveiling function: கருணாநிதியின் சிலையை பார்த்தபோது நெஞ்சம் உருகிவிட்டது, சிலை நம்முடன் பேசுவதுபோல் உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை இன்று சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 1.70 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சிலையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், என் உயிரினும் மேலான தலைவர், தமிழகத்தை தலைநிமிர்த்தியவர், திராவிட இயக்கத்தை 50 ஆண்டு காலம் தன் தோளிலே சுமந்தவர் கருணாநிதி. கருணாநிதியின் சிலையை பார்த்தபோது நெஞ்சம் உருகிவிட்டது. நம்முடன் பேசுவது போலவே கருணாநிதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தை சட்டப்பேரவை நடக்கும் இடமாக மாற்றி ஒரு மகத்தான கட்டிடத்தை எழுப்பியவர் கருணாநிதி. ஓவ்வொரு செங்கலாக செதுக்கியவர் கருணாநிதி.
இதையும் படியுங்கள்: காலையில் சாவர்க்கர்… மாலையில் கருணாநிதி… ஓயாத சர்ச்சையில் வெங்கையா வருகை!
முடியாததை முடித்துக் காட்டுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதி தான், ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான். கருணாநிதி சிலை எங்கே இருக்க வேண்டும்? ஏன் இருக்க வேண்டும் என சிந்தித்து முடிவெடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளைத் தொடர்ந்து கருணாநிதி சிலை அமைந்துள்ளது.
வெங்கையா நாயுடுவிடம் எங்களைப் போல் நீங்கள் டெல்லியில் வேட்டிக் கட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் ஆந்திராபோல் அல்லாமல், தமிழகம் போல் கட்டிக் கொண்டுள்ளீர்கள். அதனால் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர். கருணாநிதி கைது செய்யப்பட்டப்போது துடித்தவர் வெங்கையா நாயுடு. கருணாநிதி சிலையை திறக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.