கர்நாடக மேல்-சபை தேர்தலில் 7 பேரும் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு

கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா உள்பட 3 கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 7 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழை வழங்கினார். இதன்மூலம் மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடைத்தது.

கர்நாடக மேல்-சபை

கர்நாடகத்தில் 75 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபை செயல்பட்டு வருகிறது. சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) பலத்தின் அடிப்படையில் மேல்-சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் 7 இடங்கள் காலியாகின்றன. இந்த 7 இடங்களுக்கும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

போட்டியின்றி தேர்வு

இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் லட்சுமண் சவதி, சலவாதி நாராயணாமி, ஹேமலதா நாயக், கேசவ பிரசாத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் டி.ஏ.ஷரவணா ஆகிய 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 7 இடங்களுக்கு 7 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது. இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை.

7 இடங்களுக்கு 7 பேர் மட்டுமே களத்தில் இருந்ததால், மனு தாக்கல் செய்த 7 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான விசாலாட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தனி மெஜாரிட்டி

மேலும் அந்த 7 பேருக்கும், போட்டியின்றி எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி விசாலாட்சி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கினார்.

இதன் மூலம் கர்நாடக மேல்-சபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது. பா.ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய கோடீசுவரர்

புதிய எம்.எல்.சி.களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதாவை சேர்ந்த சலவாதி நாராயணசாமி, லட்சுமண் சவதி, ஹேமலதா நாயக், கேசவ பிரசாத், காங்கிரசை சேர்ந்த நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த டி.ஏ.ஷரவணா ஆகிய 7 பேரின் சொத்து விவரம் வருமாறு:-

புதிய எம்.எல்.சி.க்களில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் டி.ஏ.ஷரவணா தான் பெரிய கோடீசுவரர். அவரின் சொத்து மதிப்பு ரூ.41.55 கோடி. அவருக்கு ரூ.8 கோடி கடன் உள்ளது. ரூ.10.98 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. அதில் ரூ.89 லட்சம் மதிப்பில் தங்க நகைகள் உள்ளன. அவருக்கு அடுத்தபடியாக பா.ஜனதா வேட்பாளர் லட்சுமண் சவதிக்கு ரூ.36.37 கோடி சொத்து உள்ளது. இதில் ரூ.6.48 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. அவருக்கு ரூ.1.81 கோடி கடன் இருக்கிறது.

சலவாதி நாராயணசாமி

காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜ் யாதவிற்கு ரூ.7.2 கோடி சொத்து இருக்கிறது. அவருக்கு ரூ.3.1 லட்சம் கடன் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ஜப்பாருக்கு ரூ.6.95 கோடி சொத்துகள் உள்ளன. அவருக்கு ரூ.71.36 லட்சம் கடன் உள்ளது.

பா.ஜனதா வேட்பாளர் கேசவபிரசாத்திற்கு ரூ.4.05 கோடி சொத்துகள் உள்ளது. அவருக்கு இருக்கும் கடன் ரூ.13.50 லட்சம் ஆகும். பா.ஜனதா வேட்பாளர் சலவாதி நாரயாணசாமிக்கு ரூ.6.33 கோடி சொத்து இருக்கிறது. அவருக்கு கடன் இல்லை. பா.ஜனதா வேட்பாளர் ஹேமலதா நாயக்கிற்கு ரூ.70.80 லட்சம் சொத்து இருக்கிறது. அவருக்கும் கடன் இல்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.