ஜெனீவா : ‘பல்வேறு நாடுகளில் தென்பட்டுள்ள ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு பரவல் தற்போது தான் துவங்கியுள்ளது. இது மிக வேகமாக பரவக் கூடியது அல்ல. ‘இருப்பினும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
கடந்த, 1980களில் ஒழிக்கப்பட்ட சின்னம்மை நோய் போன்றது இந்த குரங்கு காய்ச்சல். கடும் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுவது இதன் அறிகுறிகளாகும். வழக்கமாக ஆப்ரிக்க நாடுகளில் தென்படும் இந்த வைரஸ் பாதிப்பு, தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என, பல நாடுகளில் பரவி வருகிறது.
இம்மாதம், 7ம் தேதி துவங்கிய இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை, 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று பரவல் தடுப்பு பிரிவின் தலைவர் சில்வியே பிரயான்ட் கூறியுள்ளதாவது:குரங்கு காய்ச்சல் பரவலின் துவக்க நிலையிலேயே நாம் இருக்கிறோம்.
வழக்கத்துக்கு மாறாக பல்வேறு நாடுகளில் இதன் பரவல் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்கலாம்.அதே நேரத்தில், கொரோனா வைரஸ் போல இது வேகமாக பரவக் கூடியது அல்ல. அதுபோல, அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தாது. கடந்த, 1980களில், சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டது. அதன்பின், இதற்கான தடுப்பூசி எடுப்பது குறைந்துள்ளது. இந்நிலையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாம் அச்சப்பட தேவையில்லை. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலே, பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement