கோவை: இந்தியாவைச் சேர்ந்த ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள “மண் காப்போம்” சுற்றுச்சுழல் இயக்கத்திற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், அஸர் பைஜான் நாடுகள் மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
உலகளவில் அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெப்பதற்காக சட்டங்களை உருவாக்க வலியுறுத்தி ‘மண் காப்போம்’ என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை துருக்கி, அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 7 நாடுகளுக்கு பயணித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரின் உரையைக் கேட்டனர். ஒவ்வொரு நாடுகளிலும் அந்நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பிறத்துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஜக்கி வாசுதேவைச் சந்தித்து மண் வளப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டேயேவுடன் சத்குரு காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பாலஸ்தீன பிரதமர், “மண்ணை காக்க நீங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பணிக்காக நான் உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் வீடியோக்கள் நான் பார்த்துள்ளேன். நீங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தத்தவஞானியாகவும் உள்ளீர்கள். மனதை உறைய வைக்கும் உங்கள் ஞானத்தை நான் பாராட்டுகிறேன். மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாலஸ்தீன தரப்பில் இருந்து நான் முழு ஆதரவு அளிக்கிறேன். என்ன தேவையோ, அதை செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அப்துல்நபி அல் ஷோலா, “மனித குலத்தின் நல்வாழ்விற்காக சத்குரு தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். அவருடைய சிந்தனைகள் மற்றும் தத்துவங்கள் அனைத்து மதத்தினர் மற்றும் கலாச்சாரங்களுக்கு சென்று சேர்கிறது. அவர் என்ன சொன்னாலும், நாங்கள் அதை முஸ்லிம்களாக நம்புகிறோம். இங்கு இருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களும் அவர் சொல்வதை நம்புகிறார்கள். நாங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் நமக்குள் நாம் நல்லிக்கணக்கமாகவும், அமைதியாக வாழ வேண்டும் என்பது தான்” எனக் கூறினார்.
துபாய் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் அமைச்சர் மரியம் பின்ட் முகமது “நீங்கள் மண்ணைப் பற்றி மிகவும் வித்தியாசமாக என்னை சிந்திக்க தூண்டியுள்ளீர்கள். மண் வளத்தை மீட்டெடுக்கும் இம்முயற்சியில் நாம் அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற உங்களின் வேண்டுகோளை ஏற்கிறோம். உங்களின் உதவியோடு மேலும் பலவற்றைச் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். நாம் ஒன்றாக இணைந்து இதனை நிகழச் செய்வோம்.” எனக் கூறினார்.
முன்னதாக, ஜக்கி வாசுதேவ் மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 22-ம் தேதி வரை ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 67 நாட்களில், 26 நாடுகளுக்கு சுமார் 20,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜக்கி வாசுதேவ் நாளை (மே-29) இந்தியா திரும்புகிறார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அதன் பிறகு இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து, நிறைவாக ஜூன் 21-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.