டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் புனித யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் உள்ள 4 புனித தலங்களில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவை உத்தரகாசி மாவட்டத்திலும், கேதார்நாத் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், பத்ரிநாத் சமோலி மாவட்டத்திலும் உள்ளன. இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து 3.35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத்துக்கும், 3.15 லட்சம் பக்தர்கள் பத்ரிநாத்துக்கும், 1.49 லட்சம் பக்தர்கள் யமுனோத்ரிக்கும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கங்கோத்ரிக்கும் கடந்த புதன்கிழமை வரை சென்றுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக சார் தாம் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால், இந்தாண்டு சார் தாம் யாத்திரைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 74 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து உத்தரகாசி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கே.எஸ் சவுகான் கூறியதாவது:
உத்தரகாசி மாவட்டத்தில் இறந்த அனைவரும் பாத யாத்திரை சென்றவர்கள். உயரமான மலைப்பகுதியில் நடந்து செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைவதை அவர்கள் உணர்வதில்லை.
சிலர் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடந்து சென்று மயக்கம் வருவதாக கூறுகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானோருக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. சிலர் கடந்தாண்டு கரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்கள். மருத்துவ பிரச்சினை உள்ளவர்கள் அதிகளவில் வருவதால், நாங்கள் தீவிர பரிசோதனையை கடந்த 5-ம் தேதி தொடங்கினோம். பிரச்சினை உள்ளவர்களுக்கு யாத்திரையை தவிர்க்கும்படி கூறினாலும், பலர் கேட்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.