CM MK Stalin speech at Karunanidhi statue unveiling function: கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய கலைஞருக்கு நம் நன்றியின் அடையாளமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை இன்று சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 1.70 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சிலையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், வாழ்வில் ஓர் பொன் நாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய கலைஞருக்கு நம் நன்றியின் அடையாளமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது. பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைகளுக்கு இடையே கலைஞர் சிலை அமைந்துள்ளது சிறப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்காக இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டது. அதனை உருவாக்கிய கலைஞருக்கு இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்து விமர்சித்தவர் வெங்கையா நாயுடு. சிலையை யாரைக் கொண்டு திறக்கலாம் என யோசித்தப்போது, எங்கள் நினைவில் முழுமையாக வந்தவர் வெங்கையா நாயுடு. அவர் சிலையைத் திறப்பது சாலப் பொருத்தம்.
இதையும் படியுங்கள்: கருணாநிதியின் சிலையை பார்த்தபோது நெஞ்சம் உருகிவிட்டது – துரைமுருகன்
இந்தியா நாட்டின் பல பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களை உருவாக்கியவர் கருணாநிதி. திமுகவை அண்ணாவுக்குப் பிறகு 50 ஆண்டுகள் திறம்பட வழிநடத்தியவர் கருணாநிதி. கால் பதித்த அனைத்து துறைகளிலும் சாதித்தவர் கருணாநிதி. ரஜினிக்கு தெரியும் திரைத்துறைக்கு வரும் அனைவரும் கருணாநிதியின் வசனத்தை பேசிதான் வாய்ப்பு கேட்பார்கள்.
நாம் காணுக்கூடிய நவீன தமிழ்நாடு என்பது கலைஞர் உருவாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிறை சென்றவர் கருணாநிதி. நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி. பள்ளி, கல்லூரி, சிப்காட், சிட்கோ, சுய உதவிகுழு, வேலைவாய்ப்பு, மகளிர் போன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். தனது சிலை இடிக்கப்பட்டபோதும் கவிதை பாடியவர் கருணாநிதி. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.