புதுடெல்லி: ஆக்ராவின் தாஜ்மகால் கட்டிடம் சேதமடையக் காரணமான இந்திய தொல்பொருள் ஆயவகத்தினர் (ஏஎஸ்ஐ) மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இம்மனுவானது ஜூன் 16-இல் விசாரிக்கப்படவுள்ளது.
காதல் சின்னமான தாஜ்மகால் மீதான நீதிமன்ற வழக்குகள் மேலும் தொடர்கின்றன. இதைக் கட்டிய முகலாய மன்னரான ஷாஜஹான், அங்கு கோயிலை இடித்துவிட்டுக் கட்டியதாகப் புகார்கள் உள்ளன. இப்பிரச்சனையில் தாஜ்மகாலின் அடித்தளத்தின் 22 அறைகள் பல வருடங்களாக மூடி இருப்பதாகவும். அவற்றில் இந்துக்களின் கடவுள் சிலைகள் உள்ளதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தின் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு, இரண்டு வாரங்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஆக்ராவில் உலக அதிசயமாக உள்ள தாஜ்மகால் மீது புதிய வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தமுறை தாஜ்மகால் கட்டிடம் சேதமடையக் காரணமாக, அதை நிர்வகிக்கும் ஏஎஸ்ஐயின் அதிகாரிகள் இருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதை ஆக்ராவாசியான உமேஷ் சந்த் வர்மா (63) என்பவர் தொடுத்துள்ளார். இம்மனுவை ஆக்ராவின் செஷன்ஸ் நீதிமன்றம் ஜூன் 16-இல் விசாரணைக்கு வர உள்ளது. தனது மனுவில் உமேஷ் சந்த் வர்மா, ‘தாஜ்மகாலினுள் உள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் சமாதிகள் உள்ளன. இவற்றுக்கு வருடந்தோறும் சந்தனக்கூடு உருஸ் விழாவிற்கு ஆக்ரா முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, சுமார் ஒன்றரை லட்சம் பொதுமக்கள் தாஜ்மகாலினுள் ஏஎஸ்ஐயால் அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது மூன்று தினங்களுக்காக அவர்கள் கட்டணங்களும் பெறுவதில்லை.
இவர்கள் உருஸ் நாட்களில் தாஜ்மகாலின் கட்டிடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேதப்படுத்துகின்றனர். இதற்கு ஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பு என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணமாக, தாஜ்மகாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, ஷாஜஹானின் உருஸ் விழாவிற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த விழா, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள் அனுசரிக்கப்படுகிறது.
அஜ்மீர் தர்கா மீது புகார் வழக்கு: ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் முஸ்லிம்கள் பெருமளவில் வருகை தம் காஜா கரீப் நவாஸ் தர்கா உள்ளது. இதன் ஜன்னல்களில் ஸ்வஸ்திக் மற்றும் தாமரையின் உருவச் சின்னங்கள் அமைந்துள்ளன. இவை இந்துக்கள் வணங்குவதாக உள்ளதால், அங்குள்ள கோயிலை இடித்து, தர்கா கட்டப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெல்லோட்டிடம், மஹராணா பிரதாப் சிங் சேனாவின் தேசியத் தலைவரான ராஜ்வர்தன் சிங் பார்மர் அளித்துள்ளார்.
இதில் ராஜ்வர்தன் சிங், தர்காவினுள் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சூபிக்களின் தர்காவில் சமீபத்தில் காஜா கரீப் நவாஸின் 810 ஆவது உருஸ் நடைபெற்றது.