திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே நேற்று பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதனைப் பார்த்து பதறிப்போய் உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே ஆண்டவர் கோவில் அருகிலுள்ள மான் பூண்டி ஆற்றின் முட்புதர் பகுதியில் இருந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக பொதுமக்கள் ஓடிப்போய் பார்க்க, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று முட்புதர்களுக்கு இடையே கதறியபடி கிடந்துள்ளது.
அதனைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள் உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த இரு விவகாரம் பற்றித் தகவல் தெரிந்ததும் மணப்பாறை போலீஸார், மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்த, `முட்புதரில் குழந்தையை வீசிச்சென்றது நான் தான். அது என்னுடைய குழந்தை’ என்றதோடு அதிரவைக்கும் வகையில் நடந்த உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். அவர், `என்னோட பெயர் ஜெயா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 38 வயசு ஆகுது. மணப்பாறையை அடுத்த இனாம்ரெட்டியபட்டி தான் என்னோட சொந்த ஊர். 8 வருஷத்துக்கு முன்னாடி என்னோட கணவர் இறந்துட்டாரு. எனக்கு 8 வயசுல பெண் குழந்தை ஒன்னு இருக்கு. இதுக்கிடையில, ஒருத்தரோட எனக்கு இருந்த தொடர்புல குழந்தை உண்டாச்சி. நேத்து ஆண்டவர் கோயில்கிட்ட வர்றப்ப திடீர்ன்னு வயிற்றுவலி உண்டாச்சு. ஆஸ்பத்திரி போனா தேவையில்லாத சிக்கல்ன்னு நானே முள்காட்டுல பிரசவம் பார்த்தேன். குழந்தை பிறந்ததும் அதை அங்கயே போட்டுட்டு வந்துட்டேன். பிரசவம் ஆன களைப்புலையும், வெயில் தாங்க முடியாமயும் கோயில் பக்கத்துல மயங்கி படுத்துட்டேன்’ என்றிருக்கிறார்.
இதுகுறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “திருமணம் தாண்டிய உறவால் ஜெயா கர்ப்பமானது குறித்து அவரின் வீட்டில் சொல்ல பிரச்னையாகியிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாய் எந்தவித ஆதரவுமில்லாமல் இருந்துவந்தவருக்கு, திடீரென பிரசவ வலி வந்து தனக்குத் தானே பிரசவம் பார்த்ததோடு, குழந்தையை காட்டிலேயே வீசிவிட்டு வந்திருக்கிறார். இப்போது தாயும், குழந்தையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயரதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்றுதான் குழந்தையை காப்பகத்தில் சேர்ப்பதா அல்லது என்ன செய்யவது என முடிவெடுக்க முடியும்” என்றனர்.