1959 மார்ச் 30, தலாய் லாமா இந்தியாவின் தவாங் பகுதியை வந்தடைந்தார். சீனா, திபெத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம் அது. சீன ராணுவத்தின் பிடியில் அகப்படாமல் தப்பித்து சுமார் இருபது நாட்கள் இமய மலைப் பகுதிகளில் தலைமறைவு பயணம் மேற்கொண்டனர் தலாய் லாமாவும் அவரது சீடர்களும். இந்திய எல்லைக்குள், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியை வந்தடைந்தபொழுதுதான் அவர் சுதந்திர காற்றை முதன்முறையாக சுவாசித்ததாக திபெத்திய மதத்தலைவரான தலாய் லாமா ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
1962, இந்தியா சற்றும் எதிர்பாராத நேரத்தில் சீனா இந்திய எல்லைகளை தாக்கத் தொடங்கியது. ஏற்கனவே நிலவி வந்த எல்லை தொடர்பான சச்சரவுகளை அப்போதைய பிரதமர் நேரு தனது சாதுர்யமான அரசியல் கொள்கைகளால் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். இருப்பினும் சீனா தனது நெருக்கடியை விடாமல் தொடர்ந்தது. இரு நாடுகளும் தங்களை கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக இருந்த நேரமாதலால் போர் அச்சுறுத்தல் இருந்தாலும் இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு சீனா போரில் ஈடுபடாது என்றே நேரு நம்பியிருந்தார். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் சீனாவின் நடவடிக்கைகளில் ஒளிந்திருந்த குரூரத்தைக் குறித்து பலமுறை நேருவை எச்சரித்தபொழுதும் நேரு அதற்கு செவிசாய்க்காமல் போனதன் விளைவே இந்தியா சீனாவிடம் போரில் கடுமையான தோல்வியை சந்திக்கும் காரணமாகியது. தலாய் லாமாவை வரவேற்று புகலிடம் அளித்ததும் அக்காரணங்களில் முக்கியமானதாக கூறப்படுகிறது.
தரம்சாலாவின் தெளலதார் மலைத்தொடரின் பள்ளத்தாக்குகளில் திபெத்திய மதகுருவான தலாய் லாமாவின் இருப்பிடம் அமைந்துள்ளது. முசோரியில் சில காலம் வசித்து வந்த தலாய் லாமாவும் அவரது சீடர்கள் மற்றும் அவருடன்
சுற்றிலும் திபெத்திய மக்களின் குடியிருப்புகளும், பெளத்த மடாலயங்களும் அமையப்பெற்றுள்ள அப்பகுதி இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மெக்லியோட் கஞ்ச் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பு.
நாங்கள் அங்கு வசித்த சில வருடங்களில் பலமுறைகள் தலாய் லாமா வசிக்கும் மடாலயத்திற்கு சென்றிருக்கிறோம். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பக்சுநாக் என்கிற இராட்சத நீர்வீழ்ச்சி இருக்கிறது. மூன்று நாட்கள் பயணமாக திட்டமிட்டு அங்கு சென்று வருவது வழக்கம்.
வழிநெடுகிலும் திபெத்தியர்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் ஓவியங்களையும், ஆடை ஆபரணங்களையும் விற்பனைக்கு வைத்திருபபர். கம்பளி ஆடைகள் தயாரிப்பதில் வல்லவர்களான திபெத்திய பெண்மணிகளின் கலைப் படைப்புகள் அணிவகுத்திருக்கும் கடைகளை பார்வையிட்டவாறே மடாலயத்தை நோக்கிய பயணம் இருக்கும்.
திபெத்திய உணவுமுறைக்கு நான் பரிச்சயமானதும் அப்பொழுதுதான். அவர்களின் உணவின் தன்மையில் ஆரோக்கியம் பேணும் கீரை வகைகள் முக்கிய பங்காற்றுவதை காண முடிந்தது. மாமிச உணவென்றாலும் அவை வறுக்கப்படாமலும் பொரிக்கப்படாலும் வேகவைத்து மட்டுமே உட்கொள்ளப்படுவது தெரிந்தது. திபெத்தியர்களின் நீண்ட ஆயுள்காலத்திற்கு பெருங்காரணமாகத் திகழ்வது அவர்களது உணவுப்பழக்கங்களும் வாழ்வியல் முறைகளும்தான். அவ்வீதியில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்மணியிடம் பேசினேன்.
என்றேன். அதற்கு அவர் “நாங்கள் பறவைகளின் வாழ்வியலை கடை பிடிப்பவர்கள், பறவைகள் எழும்பொழுது நாங்களும் எழுந்து விடுவோம். அதிகாலை பிரார்த்தனைகள் முடித்துக் கொண்டு அன்றைய நாளுக்கான பணிகளை சோர்வின்றி செய்து முடிப்போம். பறவைகள் கூடடையும் நேரத்தில் நாங்களும் அந்நாளை முடித்துக்கொண்டு குடும்பத்தினருடன் ஓய்வெடுப்போம்.
அதிகாலை துயிலெழுதல் எங்கள் ஒழுக்க விதிகளுள் முக்கியமானது” என்று அழுத்தமாகக் கூறினார். அவரின் உணவகத்தில் ‘மட்டன் பெட்சே’ என்கிற ஆட்டிறைச்சி உணவுக்கு எனது நாவரும்புகள் அடிமையாகின. அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் அவரின் உணவகத்தில் “மட்டன் பெட்சே” தவறாமல் உண்பேன். திபெத்திய மனிதர்கள் தங்களது நிலப்பரப்பின் கலாசாரத்தைப் பின்பற்றியே தங்களது வாழ்வியலை அமைத்துக் கொண்டிருப்பது வியப்பிற்குரியதாக இருந்தது. சில நாள்கள் அயல்நாட்டில் வாழ்ந்து விட்டாலே தம் சொந்த மண்ணின் அடையாளங்களை மறந்து விடுபவர்களை அறிந்திருப்பதால் பல தலைமுறைகளாக வேறு நாட்டில் அகதிகளாக வாழும்பொழுதும் தமது பண்பாட்டையும், மதக்கோட்பாடுகளையும் தீவிரமாக பின்பற்றி வாழ்கின்றனர் திபெத்தியர்கள். இன்று நாடு முழுதும் ‘திபெத்தியன் சொஸைட்டி’ ஆங்காங்கே காணப்படுவதும் அதற்கொரு சான்று.
மடாலயத்தின் நுழைவு வாயிலில் இடப்புறம் ஒரு பலகையில் ஒரு சிறுவனது புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அவர் அடுத்த பஞ்சன் லாமா என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அவரை பஞ்சன் லாமாவின் அவதாரமாக லாமா உயர்மட்ட குழு அறிவித்த சில நாட்களிலேயே சீனா அவரை கடத்திச் சென்று விட்டதாக அதில் எழுதியிருந்தது. 1989 ஆம் ஆண்டு பிறந்த அவரை சீன அரசு இன்று வரை விடுவிக்கவில்லை. அவரின் இருப்புக் குறித்த யாதொரு தகவலையும் வெளியிடவில்லை. “நமது பஞ்சன் லாமாவின் நல்வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போம்” என்கிற இறுதி வாக்கியம் என் யோசனையை தீவிரமாக்கியது. மதமும் அரசியலும் இணையும் புள்ளி ஆபத்தானது.
சீனாவின் அரசியல் ஆட்சிக்குள் இடம்பெற விரும்பாத தலாய் லாமா தலைமையிலான திபெத்திய கூட்டமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலம் துறந்து உலகின் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். “திபெத்தியன் ஒவ்வொருவனின் பிரார்த்தனையும் என்றாவது ஒருநாள் தனது சொந்த நிலத்திற்கு திரும்பி தனது மதம் மற்றும் தனது நம்பிக்கைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதுதான். அதை நோக்கியே எங்களை வழிகாட்டுகிறார் தலாய் லாமா” என்று ஒரு பெண்மணி ஆங்கிலத்தில் எங்களிடம் கூறினார். அவர் வெகுநேரமாக தனது நேர்த்திக் கடனை செலுத்திக் கொண்டிருந்தார். தலாய் லாமா இருப்பிடம் அமைந்திருந்த திசை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பின்பு எழுந்து நின்று ஏதோ மந்திரம் ஜபித்து விட்டு மீண்டும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அவரின் கடினமான நேர்த்திக்கடன் செலுத்தும் முறையைப் பார்த்து சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.” மனிதன் நம்பிக்கைகளால் ஆனவன்” என்று மனதில் ஒரு குரல் ஒலித்தது.
மடாலயத்தின் நுழைவுவாயிலையொட்டி மறுபுறச் சுவற்றில் சீனாவிற்கு எதிரான திபெத்திய புரட்சிப் போராட்டங்களில் உயிர் நீத்த மாவீரர்களின் புகைப்படங்களும் பெயர்களும் பொறிக்கப் பட்டிருந்தன. “அவர்களது தியாகத்தை நினைவு கூறுவோமாக” என்று கீழே எழுதப்பட்டிருந்தது. மடத்தினுள் நுழையுமுன்னமே ஏராளமான செய்திகள் மனதை நிறைத்து விட்டிருந்தன. இதற்கு மேல் உள்ளே சென்று வழிபட என்ன இருக்கிறது என்று அமைதியின்மை மனதை நெருக்கியது. உயிர்பலிகளின்றி மதங்களும், புரட்சிகளும் இருந்ததில்லை போலும்.
தலாய் லாமாவின் தரிசனத்திற்காக அவரின் வீட்டின் முன் பல நூறு மனிதர்கள் காத்திருந்தனர். நாங்களும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்றோம். கூட்ட நெரிசலில் என் கால்கள் எதன் மீதோ மோதி நின்றன. ஒரு துணி மூட்டை போல் மடிந்து சுருண்டிருந்த அதை உற்று கவனித்ததில் அது ஒரு மனித உருவம் என்று தெரிந்தது. சட்டென்று விலகி அவரிடம் குனிந்து மன்னிப்புக் கேட்டேன். ஒரு மூதாட்டி அவர். மெல்ல தனது தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தார். அவரின் கரும்பச்சை நிறக்கண்கள் மரகத கற்கள் போன்று மின்னின. அப்பார்வையின் ஒளி என்னை நிலைகுலையச் செய்தது. நான் அவரின் பாதம் தொட்டு வணங்கினேன்.
அவரின் உதடுகள் ஓயாது ஏதோ ஜபித்துக் கொண்டேயிருந்தன. அவரின்கைவிரல்களின் நடுவே மணிமாலை ஒன்றிருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் ஒரு மணியை நகர்த்திய பொழுது மலைச்சிகரத்தை ஏறிட்டுப் பார்த்து வணங்கினார். அவரருகே நெடுநேரம் அமர்ந்திருந்தேன். மனம் ஒருவாறு அமைதியடைந்தது. மனிதர்கள் கூடுவது ஓரிடமாக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கமும் வெவ்வேறாக இருக்கின்றது. அதுவரை அமைதியற்றிருந்த என் மனம் அம்மூதாட்டியின் அருகாமையில் அமைதி கொண்டது.
மடத்தின் கருவறை நோக்கி முன்னேறுகையில் இருபுறமும் சுழலும் உலோக உரல்கள் வைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு உரலின் மீதும் ஏதோ எழுதப்பட்டிருந்தது. Aum Mani Padme hum என்று ஆங்கிலத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. “இதயத்தாமரையின் நடுவே வீற்றிருக்கும் மணியே” என்று அதற்கு பொருள். பெளத்த மதத்தில் தாமரை மலருக்கு முக்கியத்துவமுண்டு. கருணையின் வடிவமாக அவர்கள் தாமரையைக் குறிப்பிடுவர்.
கருணைமிகுந்த இதயத்தில் வீற்றிருக்கும் இறையே உன்னை வணங்குகிறோம் என்று அந்த மந்திரத்திற்குப் பொருள் கூறுகின்றனர். ஆண்மையும் பெண்மையும் சங்கமிக்கும் புள்ளியாகவும் தாமரையின் உருவத்தை ஒருசிலர் உருவகிக்கின்றனர்.
அம்மந்திரந்தின் உச்சரிப்பே மனதிற்கு பேராறுதல் அளித்தது. சில நிமிடங்களில் அது என் உதடுகளிலும் தொற்றிக் கொண்டது. அதனை உச்சரித்துக் கொண்டே கருவறைக்குள் நுழைந்தேன்.
கருவறையின் நடுநாயகமாக ஒரு பெரிய அரியணை அமைக்கப்பட்டிருந்தது. அது மஞ்சள் துணியால் மூடப்பட்டிருந்தது. அது புனித தலாய் லாமாவின் இருக்கை என்று எழுதப்பட்டிருந்தது. தலாய் லாமா அவர்கள் அவ்விருக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு நல்லுரைகள் வழங்குவார்.
அரியணையைச் சுற்றிலும் சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்நீர் கிண்ணங்களில் நீர் சலனமின்றி நின்றது. வெவ்வேறு மனநிலையில் எண்ணற்ற ஆசைகளையும் தேவைகளையும் ஏந்தி வரும் மனிதர்களின் எண்ண அலைகளை சீர்ப்டுத்தி இறைவனை நோக்கி திருப்பும் அடையாளங்களாக அந்நீர் கிண்ணங்கள் அங்கு வைக்கப் பட்டிருந்தன. நான் ஒவ்வொரு கிண்ணமாக அருகிச்சென்று அதில் என் முகம் பார்த்துக் கொண்டேன். கருவறையைச் சுற்றி முடித்த பொழுது மீண்டும் கிண்ணத்து நீரில் முகம் பார்த்தேன் அப்பொழுது என் முகம் எனக்கு தெரியவில்லை. மஞ்சள் விளக்கொன்றின் சுடரொளியே அதில் தெரிந்தது. எனக்கு ஆச்சரியம் விரிந்தது. அதை கவனித்த இளந்துறவி ஒருவர் “உங்கள் முகமும் மஞ்சள் சுடரும் முன்பும் தெரிந்தன. நீங்கள் முதலில் உங்கள் முகம் காண்பதில் கவனம் செலுத்தினீர்கள். நேரம் கடந்ததும் மஞ்சள் சுடரின் மீது கவனம் செலுத்தினீர்கள்.
என்றார். நான் அவரை வணங்கினேன்.
அரியணையின் இருபுறத்திலும் மன்னர் அவலோகிதேஷ்வரின் நான்கு முக சிலையும் அதனடியில் சாக்கிய முனி என்று எழுதப்பட்டிருந்த புத்தர் தவ வடிவில் அமர்ந்திருந்த சிலையும் இருந்தன. அவலோகிதேஷ்வரர் சிவனுக்கு நிகரான தெய்வமாக கருதப்படுகிறார். சாக்கிய முனி என்பது புத்தரின் இறுதி நாட்களின் தவத் தோற்றம் என்கிறார்கள். சாக்கியம் என்றால் சாந்தம் என்று பொருள் உள்ளதாம். ஊன் உருக்கி உடலுருக்கி உயிருருக்கி தவம் புரிந்த புத்தர் மனித குலம் தழைக்க கருணை ஒன்றையே மார்க்கமாகக் குறிப்பிடுகிறார். ” நீ பிச்சை கேட்டு செல்லும் போது ஒருவன் உன் பாத்திரத்தில் எச்சில் உமிழ்ந்தால் அதையும் ஏற்றுக்கொள். அப்படிச் செய்வதால் அவனது செயலுக்கு நீ முழுமையளிக்கிறாய். அவனுடன் வாதிடுவதோ சண்டையிடுவதோ அவனை மீண்டும் அச்செயலை செய்யத் தூண்டும். சகமனிதனை அவனது செயல்களின் பந்தத்திலிருந்து விடுவிப்பவனே புத்தன்”.
மலைகளின் பின்னே சூரியன் மறையத்துவங்கியிருந்தான். மெக்லியோட் கஞ்ச் முழுவதும் அமைதிப் போர்வை விரிந்தது. பறவைகள் கூடடைந்தன.
நாங்கள் மடலாயத்தில் வழிபட்டு திரும்பினோம். ‘ஓம் மணி பத்மே ஹும்’ என்கிற மந்திரம் மலை முகடுகளில் பட்டு எதிரொலித்தது.
மனமெனும் தாமரையில் வீற்றிருக்கும் கருணையே கடவுள். அதுவே நிலங்கள் கடந்து மதங்கள் கடந்து மொழிகள் கடந்து எல்லைகள் கடந்து மனிதர்களை பிணைத்து வைத்திருக்கிறது.
பேருண்மைகள் கூறும் பயணங்கள் தொடரும்…