பறிபோகும் பெருமை? – மாநிலங்களவையில் பாஜக பெற்ற 100 இடங்கள் கைநழுவுகின்றன

புதுடெல்லி: 1990-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலங்களவையில் 100 இடங்களை பெற்ற ஆளும் கட்சி என்ற பெருமையை பாஜக அண்மையில் பெற்ற நிலையில் தற்போது அது பறிபோகும் சூழல் உள்ளது. இதனால் 100 இடங்களை தக்க வைக்க பாஜக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது பாஜகவின் பலம் 97 ஆக இருக்கிறது. கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, மாநிலங்களவையில் பாஜக பலம் 55-ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து 97-ஆக உயர்ந்தது.

பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. ஏப்ரல் மாதத்தில் நடந்த தேர்தலில், அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜக பலம் 100 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களவையில் இப்போதும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், முப்பது வருடங்களில் நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக தற்போது உருவெடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போதும், அந்தக் கூட்டணிக்கும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.

1990-ம் ஆண்டுக்கு பின் சாதனை

1990-ம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. படிப்படியாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பல்வேறு மாநிலங்களை பாஜக கைப்பற்றியதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பலம் மாநிலங்களவையிலும் தொடர்ந்து தேய்ந்து வருகிறது.

இந்தநிலையில் ஜூன் 10-ம் தேதி மீண்டும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 24 இடங்கள் பாஜக வசம் உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் 3 பேர் பாஜகவுக்கு தாவினர். இப்போது அவர்களது பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால் மீண்டும் நடைபெறும் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை. அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. அந்த 3 எம்.பி. இடங்கள் ஆந்திராவில் அனைத்து இடங்களும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸேக்கே கிடைக்கும்.

எனவே தற்போதுள்ள 24 இடங்களில் பாஜகவுக்கு 20 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் சூழல் உள்ளது. எனவே தற்போதைய 95 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 91 ஆகக் குறையும். ஏழு நியமன இடங்கள் காலியாக உள்ளன. பாஜக தனது எண்ணிக்கையை அதிகரிக்க இந்த ஏழு இடங்கள் மூலம் ஆதரவு எம்.பி.க்களை பெறலாம்.

ஆனால் அப்போதும் பாஜக 100 என்ற எண்ணிக்கையை விட இரண்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதாவது ஏப்ரலில் தொட்ட 100 என்ற எண்ணிக்கையை மீண்டும் தொடுவது கடினமான சூழலே.

ராஜஸ்தானில், சுயேச்சைகளின் ஆதரவில், மூன்று இடங்களை கைப்பற்றும் என, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. அங்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ள 4 எம்.பி.க்கள் இடங்களும் பாஜக வசம் உள்ளன. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக தலா ஒரு இடத்தை இழக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் ‘‘தேர்தலுக்குப் பிறகுதான் உண்மையான நிலவரம் தெரிய வரும். அசாமில் பாஜகவுக்கு இரண்டாவது இடத்துக்கு ஏழு வாக்குகள் குறைவாக இருந்தது. ஆனாலும் பாஜக வெற்றி பெற முடிந்தது. போதுமான எண்ணிக்கை இருந்தும் காங்கிரஸால் அதன் சொந்த மாநிலத் தலைவர் ரிபுன் போராவால் கூட வெற்றி பெற முடியவில்லை’’ என்றார்.

எனினும் பாஜக 100 என்ற எண்ணிக்கையை இழப்பதால் பெரிய அளவில் கவலைப்படவில்லை. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ஆதரவு நிலைப்பாடு கொண்ட கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவும் உள்ளது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வி. முரளீதரன் ‘‘. “நாங்கள் தற்போது மாநிலங்களவையில் வசதியான எண்ணிக்கையை கொண்டு இருக்கிறோம். முக்கிய மசோதாக்களை தடுத்து சிக்கல்களை உருவாக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் வெற்றியடையாது” என்று கூறினார்.

தகவல்: தி இந்து (ஆங்கிலம்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.