பாஜக பதற்றம் ஆகிறது என்றால், நாம் சரியாக செல்கிறோம் என்று அர்த்தம்: சு. வெங்கடேசன் எம்.பி

மதுரையில் நாளை காளவால் இருந்து பழங்காநத்தம் வரை செஞ்சட்டை பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. செஞ்சட்டை பேரணியை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின்  சார்பில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், கொளத்தூர் மணி, கோவை.கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர் சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி மற்றும் கோவை கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்துத்துவ கொள்கைகளோடு இந்தியாவை ஒற்றை தேசமாய் மாற்ற வேண்டும் என துடிப்பதோடு பாஜக செயல்படுவதை ஒன்று கூடி சிந்தாத்த ரீதியில் எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் செஞ்சட்டை, கருப்பு சட்டை பேரணி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய கொள்கையாளர்களும், உணர்வாளர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் வளர்ந்து வருகிற வருணாசிரம கொள்கையை எதிர்த்து 130 அமைப்புகள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். கருப்பு சிவப்பு நீலம் ஒன்று தான் என கருப்பு சட்டை,செஞ்சட்டை பேரணி பேரணி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கூறுகையில்.

வருணாஸ்ரம வாதிகளுக்கு எதிராக, மனுவாதிகளுக்கு எதிராக, இந்தியாவை மக்களுக்கான இந்தியாவாக, சமத்துவத்திற்கான இந்தியாவாக, சமூக நீதிக்கான  இந்தியாவாக மாற்ற பேரணி நடைபெற உள்ளது. 

ஒன்றிய அரசினுடைய தலைவர் என்ற முறையில் பிரதமரிடம், மாநில அரசின் தலைவர் என்ற முறையில், தமிழக முதல்வர் , தமிழகத்தின் உரிமைகளை, நிறைவேற்றப்படாத தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்துதல் என்பது தான், ஜனநாயகத்தின் உண்மையான குரல், அதை தான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோதும் பிரதமர் மோடி பேசினார். 

இந்தியாவை ஒற்றை அமைப்பாக, ஒற்றை குரலின் அமைப்பாக கட்டமைக்க நினைக்கும் போது மாநில முதல்வரின் கோரிக்கை குரல் பாஜகவை பதட்டம் அடைய செய்கின்றது. அவர்கள் பதறுகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில் செல்லுகிறோம் என்று அர்த்தம். 

முதல்வரின் குரலின் வெற்றி, தமிழக உரிமைகளின் வெற்றியே பாஜக பதட்டத்தில் உள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு ரயில்வே திட்டம் கூட அறிவிக்கவில்லை.  பிரதமர் மோடி திறந்து துவக்கி வைத்த திட்டங்கள் எல்லாம் 10 ஆண்டு காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய வழித்தடங்களுக்கு கடந்த ஆண்டு ரயில்வே ஒதுக்கியது 59 கோடி. ஆனால் வடக்கு ரயில்வேக்கு 36ஆயிரம் கோடி ஒதுக்கினர். தமிழகத்திற்கு பேரிடர் கால நிதியும் வர மறுக்கிறது. எந்த நிதியும் நமக்கு சரியாக கிடப்பதில்லை. 21மாநிலங்கள் கட்டுகிற ஜிஎஸ்டி வருமானத்தை தமிழகம் தனியாக கட்டி வருகிறது. நிதி விவகாரங்களில் தமிழகம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுகிறது.

தேசிய கல்விக்கொள்கை ஆர்எஸ்எஸ்க்கும் பாஜகவுக்கும் மட்டுமே நன்மை பயக்கும். வருணாசிரம கோட்பாட்டை கடைப்பிடிக்கும் கொள்கை புதிய கல்விக்கொள்கை.தமிழக மக்களுக்கும், சிறுபான்மை  மக்களின் கல்விக்கு புதிய கல்விக்கொள்கை பயன்படவே பயன்படாது. சமஸ்கிருதத்தை உச்சத்தில் வைப்பது தான் புதிய கல்வி கொள்கை. தமிழகத்தில் கல்வியை வளர்ப்பது என்றால், புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது தான் வாசல் வழி என பேசினார்.

மணி மதுரை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.