2011 இல் பாலியல் தொழிலாளிகள் மறுவாழ்வு தொடர்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளை செயல்படுத்துவது மட்டுமின்றி அதனை முறையாக பின்பற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் மே 13 அன்று அறிவுறுத்தியது.
வழக்கின் பின்னணி என்ன?
ஜூலை 25, 2007 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரெட் லைட் பகுதியில் பாலியல் தொழிலாளியை கொன்ற புத்ததேவ் கர்மாஸ்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு மனுவை பிப்ரவரி 14, 2011 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால், பாலியல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இவ்வழக்கை தானாக முன்வந்து பொதுநல வழக்காக மாற்றியது.
அதில் கூறியிருப்பதாவது, உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பாலியல் தொழிலாளர்களுக்கு, நாடு முழுவதும் மறுவாழ்வு அளிக்க மத்திய, மாநில அரசுகள் சமூக நல வாரியங்கள் மூலம் திட்டங்களைத் தயாரிக்கும் என உறுதியாக நம்புகிறோம். ஏனெனில், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழ பாலியல் தொழில் செய்பவர்களுக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது
அதன் பின் என்ன நடந்தது?
ஜூலை 19, 2011 அன்று, மூத்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான உஷா பல்நோக்கு கூட்டுறவு சங்கம், தர்பார் மகிளா சமன்வாயா கமிட்டி, ரோஷ்னி அகாடமி ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம், இப்பிரச்சினை தீர்ப்பதற்கான அறிவுரைகளை வழங்கிட தெரிவித்திருந்தது.
அக்குழுவினர் பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்தப்படுதல், பாலியல் தொழிலை விட்டு வெளியேற விரும்புவோருக்கு மறுவாழ்வு, அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான நிலைமை உருவாக்குவதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
குழு சமர்ப்பித்த ரிப்போர்ட் என்ன?
நீண்ட ஆய்வு மேற்கொண்ட குழுவினர், செப்டம்பர் 14, 2016 அன்று இறுதி அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், பாலினத் தொழிலாளர்களுக்கு இருப்பிட சான்றிதழ் இல்லாததால், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாளச் சான்றுகளைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக, அவர்களால் மறுவாழ்வுக்கான திட்டங்களை அணுக முடியவில்லை. அதேபோல், மாநிலங்கள் வழங்கும் கடனுக்கான அணுகலும் அவர்களுக்கு இல்லை.னெனில் ஆவணங்கள் இல்லாததால் வங்கிக் கணக்குகளைத் திறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினை சரிசெய்திட 1956 சட்டவிரோத கடத்தல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
மத்திய அரசு ரியாக்ஷன்
பிப்ரவரி 27, 2020 அன்று, இரண்டு வரைவுச் சட்டங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சர்கள் குழுவால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் முடிவு
இவ்விவகாரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 29, 2020 அன்று, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் (NACO) அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள சான்று இல்லாமலே ரேஷன் பொருள்கள் வழங்கிட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. அவர்களுக்கு பொருள்கள் கிடைத்திட மாவட்ட சட்டப்பணிகள் அதிகாரிகளும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஜனவரி 10, 2022 அன்று, குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைபடி, அனைத்து பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் கார்டுகள் / வாக்காளர் அட்டைகள் வழங்கும் பிராசஸை விரைவாக முடித்திட உத்தரவிட்டது.
மே 19 அன்று நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கூறியதாவது, இப்பிரச்சினைக்கு உத்தரவாதங்கள் இருந்தாலும், மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வர வேண்டும். அரசியலமைப்பு 142வது பிரிவின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரிந்துரைகள் “பாலியல் தொடர்பான மறுவாழ்வு நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், மத்திய அரசால் சட்டம் இயற்றப்படும் வரை அமலில் இருக்கும் என்று கூறுகிறது.
எஸ்சி பரிந்துரைகளில் அமல்படுத்த வேண்டியவை எவை?
மே 19 அன்று, குழுவின் 10 பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு, அவற்றில் 6 பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்தவொரு பாலியல் தொழிலாளிக்கும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருப்பத்துடன்கூடிய பாலியல் தொழில் சட்டபூர்வமானது. பாலியல் தொழிலாளர்களை போலீஸார் மோசமாக நடத்துகின்றனர். இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ போலீஸார் துன்புறுத்தக்கூடாது. கண்ணியமாக நடத்த வேண்டும்
பாலியல் கூடங்களில் ரெய்டு நடந்தால், அதனை ஊடகங்கள் ஒளிபரப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் அடையாளம், பெயர்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.
பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக ஆணுறைகளை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அவற்றை குற்றங்களாகக் கருதப்படவோ அல்லது குற்றச் செயலுக்கான ஆதாரமாகவோ கருதப்படக்கூடாது.
எந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன?
குழுவின் நான்கு பரிந்துரைகளில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது,18 வயதுக்கு மேற்பட்டோர் சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது. அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது, விடுதிகளில் ரெய்டு செய்கையில் உரிமையாளரை மட்டுமே கைது செய்தல். பாலியல் தொழிலாளியை கைது செய்யக்கூடாது, பாலியல் வேலை தொடர்பாக முடிவெடுக்கும் செயல்முறைகளில் பாலியல் தொழிலாளர்களின் பங்கு தீர்மானித்தல், பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்பான பரிந்துரை ஆகியவை அடங்கும்.
குழுவின் பரிந்துரைகளுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.