பிரஸ்மீட்டில் மோதல்: நிருபருடன் கடும் வாக்குவாதம் செய்த அண்ணாமலை

கச்சத்தீவை நாங்கள் தான் கொடுத்தோம் என்பதை ஒப்புக்கொண்டு தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் 11 நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதர் மோடி நேற்று சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக நலத்தி்டங்களை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கியதுடன் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக பேசினார். மேலும் இலங்கையின் பொருளாதா நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்திய இலங்கைக்கு தேவையாக உதவிகளை செய்யும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் பலமுறை ஒன்றிய அரசு என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதி கட்கரி தமிழ்த்தாய் வாழ்ந்து பாடும்போது எழுந்து நிற்கவில்லை, முதல்வர் ஸ்டாலின் உரை, கச்சத்தீவு விவகாரம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த பரபரப்பு அத்தனைக்கும் பதில் சொல்லும் விதமாக பேசியுள்ளார். தமிழக மக்கள் மீது அமைச்சர் நிதின் கட்கரி எண்ணற்ற அன்பு வைத்துள்ளார். அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று சொல்கிறார்கள். காணொலி காட்சி நிகழ்ச்சிகளில் ஆடியோ கேட்காது என்ற காரணத்தினால் அவர் எழுந்து நிற்கவில்லை. மற்றபடி தமிழர்கள் மீது அவருக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது.

கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் என்று முதல்வர் ஸ்டாலின சொல்கிறார். கச்சத்தீவை எப்படி மீட்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு பாடம் எடுக்க நீங்கள் யார்? திமுகதான் கச்சத்தீவை கொடுத்தது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். என் அப்பா தப்பு செய்துவிட்டார் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று முதல்வர் சொன்னால் நான் அறிவாலயத்திற்கு வந்து அவரிடம் பேசுகிறேன். கச்சத்தீவை நாங்கள் மீட்போம்.

பாஜக சார்பாக பிரதமர் மோடியை வரவேற்க காவல்துறையின் அனுமதி பெற்று பேனர் வைத்துள்ளோம் ஒட்டிவிட்டு எடுப்பது போலத்தான் வைத்துள்ளோம். இதற்காக சாலையை தோண்டவில்லை. அனைத்து பேனர்களுக்கும் அருகில் ஆட்களை நிறுத்தியுள்ளோம். திமுகதான் விதி மீறுகிறது. ஸ்டாலின் சார் வீட்டு வாசலில் நீங்கள் பேனரை பார்க்கலாம். அதனால் சொல்வதை கேளுங்கள் என்று கூறினார்.

அப்போது ஒரு செய்தியாளர் நீங்கள் சென்டர் மீடியனில் கொடி நட்டு இருந்தீர்கள். இதற்கான ஆதாரம் இருக்கிறது. ரோட்டில் ஓட்டை போட்டு கொடி நட்டு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை அண்ணே உங்கள் 200 ரூபாய் வந்துடும் அண்ணே. 400 ரூபாயா, 1000 ரூபாயா கூட உயர்த்தி கொடுத்து விடலாம் என்று கூறினார்.

ஆனால் செய்தியாளர் தொடர்ந்து அதைப்பற்றியே கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த அவர், உங்களுக்கு அறிவாலயம் காசு கொடுத்துவிடுவார்கள். கவலைப்பட வேண்டாம்.. மரியாதையா பேசுங்கள்.. 1500 ரூபாய் பணத்தை கூட இதற்காக அறிவாலயம் உங்களுக்கு கொடுக்கும். பேனர் தொடர்பான வீடியோ இருந்தால் போலீசிடம் புகார் அளியுங்கள். 3 நிமிடம் நீங்கள் கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். அப்படி என்றால் அறிவாலயத்திடம் 2000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்.

என் கட்சியை பற்றி தவறாக பேசினால் திருப்பி அடிப்பேன். 1 மணி நேரம் பேசினேன். யாரையாவது தவறாக பேசினேனா. உங்கள் தொழிலுக்கு ஒரு தர்மம் இருக்கிறது. உங்கள் கேள்வியில் நேர்மை இல்லை. நீங்கள் கேட்ட 13 கேள்வியை நான் எதிர்கொண்டிகிறேன். முதல்வரை துண்டு சீட்டு இல்லாமல் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். அமைச்சர்கள் துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா? உங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து உட்கார வைத்து இருக்கிறேன்,

திமுககாரன் என்ன வேண்டுமானாலும் பேசுவான்..அவர்களிடம் பேட்டி எடுப்பீர்கள் என்று அவர் கேட்டபோது ஒருவர் பத்திரிக்கை சுதந்திரம் என்று சொல்ல,  நீங்கள் எனக்கு பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பாடம் எடுப்பீர்களா? என்று அண்ணாமலை கோபமாக கத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சுற்றி வளைத்த பாஜகவினர் அண்ணாமலையிடம் இப்படி மாறி மாறி கேள்வி கேட்காதீங்க. எதிர்த்து பேசாதீங்க என்று கூறி அவரை உட்கார சொன்னார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.