வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: பெர்முடா முக்கோணத்தில் தங்கள் சொகுசு கப்பல் காணாமல் போனால் பயணிகளின் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படுமென அமெரிக்க கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இணையத்தில் நகைப்புக்குள்ளாகி உள்ளது.
அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா முக்கோணம் உலகின் மர்மமான முக்கோணமாக கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த முக்கோணத்தில் ஏலியன்கள் வசித்து வருவதாகவும் இதனை கடக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று கடந்த 1960ம் ஆண்டு செய்தி ஒன்றை வெளியிட்டது.
பல ஆண்டு காலமாக பெர்முடா முக்கோணம் குறித்த வதந்திகள் வலைதளங்களில் உலா வருவதை காணமுடியும். அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளின் முக்கிய சரக்கு கப்பல்கள் இந்த முக்கோணத்தை கடந்து செல்கின்றன. இந்த சரக்கு கப்பல்களுக்கு இதுவரை எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் இன்றும் பெர்முடா முக்கோணத்தை ஓர் ஆபத்தான விஷயமாக பார்ப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இந்நிலையில் தற்போது அமெரிக்க கப்பல் நிறுவனம் ஒன்று தனது கப்பல் வாடிக்கையாளர்களுக்கு பெர்முடா முக்கோணம் குறித்த தகவல் ஒன்றை அளித்துள்ளது.
பெர்முடா முக்கோணத்தை கடந்து செல்லும் தங்களது சொகுசு கப்பல் ஒருவேளை காணாமல் போனால் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை மீண்டும் அவர்களிடம் திருப்தி அளிப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பெர்முடா முக்கோணத்திற்கு இந்த கப்பல் சென்று காணாமல் போனால் பின்னர் வாடிக்கையாளர்களின் பணம் மீண்டும் அவர்களது கணக்குக்கு செலுத்தப்படுவதால் என்ன பயன் என்று தற்போது சமூக வலைதளங்களில் பலர் இந்த அறிவிப்பை கிண்டலடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement