ராம்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றொர் மகளை சமாதானப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் தனது உறவினர்களுடன் சிறுமி வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என பேரம் பேசியதாக தெரிகிறது.
மேலும் அந்த வாலிபர் சிறுமிக்கு திருமண வயது வந்தவுடன் அவளையே கல்யாணம் செய்து கொள்வதாக தெரிவித்தான். இதற்கு சிறுமியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதை பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். தன்னை சீரழித்தவன் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறினார். ஆனாலும் மகள் சொன்னதை அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. இதனால் பணத்துக்காக பெற்றோர் விலை போய் விட்டார்களே என சிறுமி வேதனை அடைந்தார்.
இதையடுத்து இனியும் உயிர்வாழ பிடிக்காமல் அவள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்திலும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவனுக்கு 17 வயதே ஆனதால் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.