சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.
மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். என் இளம்வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கின்றேன்.
கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். பன்முகத் தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்.
என்னுடைய பொது வாழ்வில் கலைஞர் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையானது. எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் நாட்டில் உள்ள மக்களுக்காக உழைக்கிறோம்.
கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். சொலல் வல்லன் சோர்விலன் அவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குரலுக்கு பொருந்துபவர் கலைஞர்.
தமிழ் சினிமாவின் புதிய போக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர்.
மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.
தாய்மொழி, தாய்நாடு ஆகியவையே மிகவும் முக்கியமானது. தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.
வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.
மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர்.
தமிழ்த் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்..
எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி