மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் முன்னிலையில் காலணி, கையுறை உள்ளிட்ட முறையான பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வார்டு வாரியாக சிறப்பு மெகா தூய்மைப் பணி நடந்து வருகிறது. இன்று மதுரை மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் நடந்த மெகா மாஸ் தூய்மைப் பணி நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார். அப்போது மேயர் முன்னிலையிலே அங்கு சாலையில் நடுவே இருந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்கள், கையுறை இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்கள் காலில் செறுப்பு கூட இல்லாமல் இருந்தனர். கழிவுநீர் தொட்டியை திறந்து வாகனம் மூலமாக சுத்தம் செய்தபோது மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் அருகில் நின்றப்படி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் மதுரை நேரு நகரில் மாநகராட்சி கழிவு நீர் சேகரிப்பு தொட்டியில் முறையான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சுத்தம் செய்தபோது 3 தூய்மைப் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி உயிழந்துள்ள நிலையில், மேயர் முன்பாகவே தூய்மைப் பணியாளர் காலணி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லாமல் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே மாநகராட்சி நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கவசங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவமும் அரங்கேறியுள்ளது.