மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள். 
இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. லண்டனில் உள்ள ராகுல்காந்தி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.  
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. 
குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தங்கா, அஜய் மக்கன், ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரும் களத்தில் உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. 
வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் இன்று ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். 
மாநிலங்களவைத் தேர்தலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். ஜார்க்கண்டில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.