புதுடெல்லி: முறைகேடாக விசா பெற்றுத் தந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா பெற்றுத் தந்தார் என்றும் இதற்காக கார்த்தி ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றார் என்றும் சிபிஐ வழக்குபதிவு செய்தது. இதற்கிடையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றிருந்த கார்த்தி, நாடு திரும்பியதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தினர். இந்நிலையில் கார்த்தி நேற்று 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்.
முன்னதாக அவர் கூறும்போது, “நாடாளுமன்ற உரிமையை சிபிஐ ஒட்டுமொத்தமாக மீறியுள்ளது. இதுகுறித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தகவல் தொழில்நுட்பக் குழு தொடர்பான எனது நாடாளுமன்றக் குழு பேப்பர்களை சிபிஐ எடுத்துச் சென்றுள்ளது. மிகவும் நம்பிக்கைக்குரிய இந்த பேப்பர்களை எடுத்துக்கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லை” என்றார்.
வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வண்டி சபோ பவர் நிறுவனம் (டிஎஸ்பிஎல்) பஞ்சாபில் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கிறது. ஒரு சீன நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் பணி கால தாமதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கு பணிபுரியும் 263 சீன தொழிலாளர்களுக்கு புராஜெக்ட் விசாவை மீண்டும் வழங்க கார்த்தி மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமனிடம் டிஎஸ்பிஎல் நிறுவனத்தின் உய ரதிகாரி ஒருவர் ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ கூறியுள்ளது.
இது தொடர்பாக பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர்கள் இருவர் தவிர மேலும் 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனிடையே கார்த்தி சிதம்பரம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கு மிகவும் போலியானது என்றும் அரசியல் பழிவாங்கலின் விளைவு என்றும் அவர் கூறியுள்ளார்.