கூடலூர்:
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்டன. அதேபோல் கேரள அரசு, முல்லைபெரியாறு அணை பலமிழந்துவிட்டது என்றும் புதிய அணை கட்டவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்ஆவதற்கு தமிழக அரசின் கூடுதல் தலைைம வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அரசு மூத்த வக்கீல் உமாபதி, ஆவணங்கள் பதிவு வக்கீல் குமணன் மற்றும் காவரி தொழில்நுட்ப குழு தலைவர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் முல்லைபெரியாறு அணைப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
பிரதான அணை, பேபிஅணை, 13 மதகுகள், நீர்கசியும் அளவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் சாம்இர்வின், கோட்டபொறியாளர் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
அவர்களுடன் உதவி பொறியாளர்கள் ராஜகோபால், பரதன், மயில்வாகனன், சென்ராம் ஆகியோரும் உடனிருந்தனர். ஆய்வுக்குப்பின் வக்கீல் குழுவினர் மாலை தேக்கடி திரும்பினர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 132.10 அடியாக உள்ளது. வரத்து 235 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 5188 மி.கனஅடி.
வைகை அணை நீர்மட்டம் 64.11 அடி, வரத்து 20 கனஅடி, திறப்பு 1009 கனஅடி, இருப்பு 4434 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.65 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 10 கனஅடி, இருப்பு 168.39 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 94.62 அடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 54.36 மி.கனஅடி.