மே.29 இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: மதுரை தனிப்படை எஸ்.ஐ.,சஸ்பெண்ட் பின்னணி

தமிழக நிகழ்வுகள்:

‘சுருட்டியதில்’ பெண் டி.எஸ்.பி.,க்கும் பங்கு : தனிப்படை எஸ்.ஐ., ‘சஸ்பெண்ட்’ பின்னணி

மதுரை மதுரையில், தனிப்படை எஸ்.ஐ., சில நாட்களுக்கு முன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதில், இவர் ‘சுருட்டிய’ பணத்தில் ஒரு பங்கு, பெண் டி.எஸ்.பி.,க்கு கொடுத்தது உண்மையா என, விசாரணை நடைபெற உள்ளது.
மதுரை எஸ்.பி., பாஸ்கரனின் தனிப்படை எஸ்.ஐ., ஆனந்த். இவர், குற்றவாளிகளை கைது செய்தல், நகை, பணத்தை மீட்டல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்வார் என, அதிகாரிகளால் பாராட்டப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., பொன்னி இவரை சஸ்பெண்ட்
செய்தார்.கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்தது மற்றும் வழக்கு ஒன்றில் 25 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதில், 9 லட்சம் ரூபாயை ‘சுருட்டியது’ ஆகிய காரணங்களுக்காக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
கள்ளிக்குடி பகுதியில், 2018ம் ஆண்டு எஸ்.ஐ., ஆனந்த் தலைமையிலான போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில், ஒரு பகுதியை தன் வசம் வைத்துக் கொண்டதாக, தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிற்கு புகார் வந்தது.
விசாரணையில், உண்மை எனத் தெரிந்தது. மேலும், தஞ்சாவூர் பெண் 25 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்ட வழக்கில், மீட்கப்பட்ட முழுத் தொகையையும் ஒப்படைக்காமல் இருந்ததும் தெரிந்தது.
இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எஸ்.ஐ., ஆனந்த், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்திருக்கிறார். அதில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை தன்வசம் வைத்துக் கொண்டார்.
குற்றவாளிகளையும் மாற்றி உள்ளார். இது சட்டப்படி தவறு. தஞ்சாவூர் பெண் வழக்கில் மீட்கப்பட்ட 25 லட்சம் ரூபாயை, முழுமையாக அவரிடம் கொடுக்காமல், 16 லட்சம் ரூபாய் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர், 9 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டவில்லை. துறை ரீதியான விசாரணையில் அந்த தொகையின் ஒரு பங்கு அப்போதைய பெண் டி.எஸ்.பி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது. உண்மையா என அந்த டி.எஸ்.பி.,யிடம், ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரிக்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

உளவுத்துறை அலட்சியம்!

போலீசார் தவறு செய்கின்றனரா என கவனிக்க வேண்டிய பொறுப்பு உளவுத்துறைக்கு உண்டு. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்படையில் பணிபுரியும் எஸ்.ஐ., ஆனந்த் மீது, அவ்வப்போது புகார்கள் வந்தது குறித்து, உளவுத்துறை விசாரித்து அதிகாரிகளை ‘அலெர்ட்’ செய்திருக்க வேண்டும்.அந்த வகையில் உளவுத்துறை அலட்சியமாக செயல்பட்டதாக அதிகாரிகளே ஆதங்கப்படுகின்றனர். தனிப்படைக்கு வந்தபின் எஸ்.ஐ.,யின் தனிப்பட்ட பொருளாதார நிலை எப்படி மாறியது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

****

‘ஸ்கேன்’ செய்து பாலினம் தெரிவித்த 7 பேர் கைது

தர்மபுரி :கர்ப்பிணியருக்கு சிசுவின் பாலினம் குறித்து, ‘ஸ்கேன்’ செய்து தெரிவித்த ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் கர்ப்பிணியரின் கருவிலுள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை, ஸ்கேன் செய்து தெரிவிக்க, ஒரு கும்பல் பணம் வசூலித்தது. இதுகுறித்து, எஸ்.பி., கலைச்செல்வன் உத்தரவுபடி, டவுன் போலீசார் விசாரித்தனர்.
இதில், தர்மபுரி அடுத்த ராஜபேட்டை, ஏரிக்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் வீட்டில், கர்ப்பிணியருக்கு ஸ்கேன் செய்வது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த ஏழு பேரை பிடித்து விசாரித்தனர். திருப்பத்துாரைச் சேர்ந்த ஜோதி, 33, உள்ளிட்டோர் என தெரியவந்தது. திருப்பத்துாரில் இருந்து ஸ்கேன் இயந்திரத்தை வாங்கி வந்து, வெங்கடேசன் வீட்டில் வைத்து, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்துள்ளனர். ஏழு பேரையும் கைது செய்து, ஸ்கேன் இயந்திரம், 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

****************

இந்தியா நிகழ்வுகள்:

‘இண்டிகோ’ நிறுவனத்துக்கு அபராதம்

புதுடில்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதுக்கு, 9ம் தேதி சென்ற ‘இண்டிகோ’ விமானத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் சிறுவனுடன் செல்ல, ஒரு தம்பதி டிக்கெட் வாங்கிஇருந்தனர். ஆனால், விமான நிலையத்தில் சோதனை நடத்திய விமான நிறுவன ஊழியர்கள், அந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்தனர்.
இதையடுத்து, அடுத்த நாள் தான் அவர்கள் பயணிக்க முடிந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம், சிறப்பு கவனம் தேவைப்படும் சிறுவனை அவமானப்படுத்திய இண்டிகோ விமான நிறுவனத்துக்கு, ௫ லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
***********************

உலக நிகழ்வுகள்:

செம்மறி ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை

ஜூபா : ஆடு முட்டியதில் பெண் உயிரிழந்த நிலையில் நீதிபதி உத்தரவுப்படி ஆடு கைது செய்யப்பட்டு ராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளது.
வட ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு செம்மறி ஆடு ஆக்ரோஷத்துடன் திரிந்து கொண்டிருந்தது. அவ்வழியாக செல்வோரை விரட்டி விரட்டி முட்டி வந்தது. காயம் அடைந்த பலர் அதன் உரிமையாளரிடம் புகார் செய்தனர்.
இந்நிலையில் அந்த செம்மறி ஆடு ஜாக்குலின் 45, என்ற பெண்ணை சமீபத்தில் முட்டி தள்ளியது. இதில் அந்தப் பெண்ணின் எலும்பு முறிந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீஸ் உரிமையாளருக்கு பதிலாக அந்த செம்மறி ஆடு மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செம்மறி ஆட்டுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ஐந்து பசுமாடுகள் வழங்க ஆட்டின் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

அபூஜா : ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று காலை அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு வாங்க பலர் கூடியிருந்தனர்.
உணவு வழங்க துவங்கியவுடன், கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி ௩௧ பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

***********

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.