மும்பை: ரிசர்வ் வங்கியின் முழுக் கவனமும் நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பண வீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் பண வீக்கத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் பணவீக்கம் தற்போது 7.79 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஆர்.பி.ஐ. நிர்ணயித்த இலக்கை விட இருமடங்கு அதிகம். இந்நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தான் ரிசர்வ் வங்கியின் முழுக் கவனமும் இருப்பதாகவும், அதேநேரம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அண்மையில் ஆர்.பி.ஐ. ரெப்போ விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், பண கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் மேலும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.