தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் சுரைக்காயூர் கிராமத்தில் வெண்ணாறு குறுக்கே நீர்வளத் துறை சார்பில் ரூ.4.88 கோடி மதிப்பில் தற்போது கட்டப்பட்டு வரும் ‘பெட் டேம்’ எனப்படும் தடுப்பணை (தளமட்ட சுவர்) கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மேற்படி தடுப்பணையின் தரத்தை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். தரத்தை உறுதி செய்த பின்னரே அப்பணிக்கான தொகையை அதன் ஒப்பந்தக்காரருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தடுப்பணை மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரைக்காயூர் கிராமம் வெண்ணாற்றின் குறுக்கே நெடுகை 73.635 கி.மீ ல் இயல்பு மட்டத்தை பராமரிக்கவும், சுரைக்காயூர் மற்றும் காவலூர் வாய்க்கால்களுக்கு தண்ணீர் வழங்க தளமட்ட சுவர் கட்டும் பணி ரூ.4.88 கோடி மதிப்பில் மார்ச் 7-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
திருவாரூரைச் சேர்ந்த வெங்கடேஷன் என்ற ஒப்பந்தக்காரரின் பெயரில் இப்பணிக்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால் கணேஷ் என்பவர் இப்பணியை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
“அதுமட்டுமின்றி, கட்டுமானப் பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. முறையாக ஆழப்படுத்தாமல், உரிய அளவிற்கு ஜல்லி, மணல், கம்பிகள் கட்டாமல் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் எல்.பழனியப்பன் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பணை கட்ட குழி தோண்டி 6 நாட்களுக்குள் வேலை செய்வதற்கு ஒப்பந்தக்காரருக்கு மார்ச் மாதம் வேலை செய்வதற்கு அதிகமாக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகளின் ஆதரவோடு இம்முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்;டுள்ளதைத் தொடர்ந்து தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் வரும்போது இதுவரை கட்டப்பட்டுள்ள கட்டமைப்புகள் இடிந்து விழும் நிலை உள்ளது
எனவே இத்தடுப்பணை கட்டுமானப் பணிகளை முறையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே ஒப்பந்தக்காரருக்கான தொகையை வழங்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றிற்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக என்று காவலூர் ஊராட்சி மன்ற தலைவர் என்.செந்தில்குமார்.கூறியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். “தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்கி 3 மாதங்களே ஆகியுள்ளன. பணிகள் முடிவடைய இன்னும் 12 மாதங்கள் உள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கூறி வருகின்றனர்.
பணிகள் தரமான முறையில் நடைபெற்று வருகின்றன. நாங்கள் அவ்வப்போது நேரில் சென்று பணியின் தரத்தை ஆய்வு செய்து வருகிறோம். வேறு எதையோ எதிர்பார்த்து ஒருசிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று அத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர்