சமீபத்தில் இயக்குநர் கரண் ஜோகர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் ஷாருக் கான் யாருக்கும் தெரியாமல் வந்து கலந்து கொண்டுவிட்டு சென்றுள்ளார். ஷாருக் கானின் வீடு மும்பை பாந்த்ராவில் கடற்கரையை ஒட்டி இருக்கிறது. மன்னத் என்று பெயரிடப்பட்டுள்ள அப்பங்களாவிற்கு கடந்த மாதம் புதிய பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. ஷாருக் கானின் மனைவி கௌரி கான் அந்த பெயர் பலகையை தானே தேர்வு செய்து வீட்டிற்கு வெளியில் பொருத்தி இருந்தார். அந்த பெயர் பலகையில் வைரம் பதிக்கப்பட்டு இருந்தது. பாந்த்ரா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பெயர்ப்பலகை முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
திடீரென அந்த பெயர் பலகையை காணவில்லை. அங்கு வரும் ரசிகர்கள் பலரும் இதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது குறித்து விசாரித்தபோது பெயர்ப்பலகையில் இருந்து ஒரு வைரம் கீழே விழுந்துவிட்டது என்றும், எனவே அந்த பெயர் பலகையை சரி செய்வதற்காக தற்காலிகமாக பெயர் பலகை முழுவதும் அகற்றப்பட்டு இருப்பதாகவும், சரி செய்த பிறகு மீண்டும் அப்பெயர் பலகை பொருத்தப்படும் என்றும் ஷாருக் கான் வாட்டாரங்கள் தெரிவித்தன. ஷாருக் கான் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் பதான் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பதான் படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. அட்லீயின் படம் ஒன்றிலும் ஷாருக் கான் தற்போது நடித்து வருகிறார். கடைசியாக ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் தோல்வியை தழுவியது.