இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தன்னை வன்புணர்வு செய்தவரிடம் பெற்றோர் பேரம் பேசியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ஆம் திகதி, உத்தர பிரதேசம் மாநிலம் ராம்பூர் கிராமத்தில் 14 சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 சிறுவன் வன்புணர்வு செய்துள்ளார்.
அதன் பின்னர், தனது உறவினர்களுடன் குறித்த சிறுமியின் வீட்டிற்கு வந்த சிறுவன், தன் மீது பொலிஸில் புகார் அளிக்க வேண்டாம் என்றும், சிறுமி வளர்ந்ததும் தானே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு சம்மதித்த சிறுமியின் பெற்றோர், அவர்களுடன் பேரம் பேசியுள்ளனர். இதனை பக்கத்து அறையில் இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுமி, தனது பெற்றோரிடம் பொலிஸில் புகார் அளித்து வழக்குப்பதிய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சிறுமியின் பேச்சை கேட்கவில்லை.
இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிறுமியின் உடலை கைப்பற்றி அவர்கள், சிறுமியை வன்புணர்வு செய்த நபரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. மேலும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு வயது 17 என்பதால் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசிய சிறுமியின் மூத்த சகோதரர், ‘தனது பெற்றோரே வன்புணர்வு செய்தவரிடம் பேரம் பேசியதால், என் தங்கை அவமானப்பட்டதாக உணர்ந்தார். அத்துடன் பொலிஸில் புகார் தெரிவிக்க அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், மிகுந்த மனவேதனை அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.