சென்னை:
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.
நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான்.
நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் அன்புமணி. அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.
இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.