புதுடில்லி : ‘மாநிலங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 27.45 கோடி அமைப்பு சாரா மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்’ என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலகட்டங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, நேரடி பணப் பலன்கள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்கள் வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, சமூக ஆர்வலர்கள் மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வெளி மாநில தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய – மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு ஜூனில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இதையடுத்து மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”மாநிலங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தேசிய தகவல் மையத்துடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 27.45 கோடி அமைப்பு சாரா மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர்,” என, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி தெரிவித்தார்.
‘பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு எந்த விதமான பலன்கள் அளிக்கப்பட உள்ளன’ என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை ஜூலை 20க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement