சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார் . ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, ” ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, நாட்டிற்கு முன்னோடியான திட்டங்களை உருவாக்கி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர்.
தீயசக்திகளால் தகர்த்தப்பட்ட கலைஞர் சிலை
ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மவுண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு, அண்ணா சாலை’ என்று பெயர் சூட்டியவரே நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் தான். அத்தகைய கலைஞருக்கு ஒரு சிலை அமைத்திட வேண்டும் என்பது தந்தை பெரியாரின் எண்ணம். பெரியார் மறைந்த பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சி எடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் (இன்றைய தாராப்பூர் டவர்ஸ் சிக்னல் அருகே) கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் 1987-ஆம் ஆண்டு மறைந்த போது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில தீயசக்திகளால், அன்றைய அரசின் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் கலைஞரின் சிலையைக் கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்த அக்கிரமத்தை அண்ணாசாலை மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த அண்ணா சாலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கலைஞர் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
#FatherOfModernTamilNadu முத்தமிழறிஞர் கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சிலை எடுக்கும் சீர்மிகு திருநாள்! அது நமக்கு தித்திக்கும் திருநாள்!
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அவர் தந்த ‘#DravidianModel‘ பாதையில் என்றென்றும் பீடுநடை போடுவோம்!#LetterToBrethren pic.twitter.com/cfBvjRYd1V
— M.K.Stalin (@mkstalin) May 27, 2022
மேலும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர், தளராத உழைப்பாளி, சமரசமில்லாத சமூகநீதிப் போராளி, நவீன தமிழ்நாட்டின் சிற்பி என கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்.
கலைஞரின் சாதனைகள்
50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கத்திப்பாரா மேம்பாலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் டைடல் பார்க், உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு அமைத்தது போன்ற மகத்தான திட்டங்களை வகுத்த தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்!
முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.