காந்திநகர்: பொதுமக்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு எதையும் செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சென்றுள்ளார். ராஜ்கோட்டில் பன்னோக்கு நவீன மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பெண்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், பணிகளும் செய்யப்பட்டுள்ளன என கூறினார். 8 ஆண்டுகளில், பாபு மற்றும் சர்தார் படேலின் கனவுகளான இந்தியாவை உருவாக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டோம். ஏழைகளின் சமையல் கூடங்கள் தொடர இலவச கேஸ் சிலிண்டர்களையும் ஏற்பாடு செய்தோம். மருத்துவ சிகிச்சையின் சவால்கள் அதிகரித்தபோது, ஏழைகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை எளிதாக்கினோம். தடுப்பூசிகள் வந்தபோது, ஒவ்வொரு இந்தியருக்கும் இலவச தடுப்பூசிகளை உறுதி செய்தோம். 3 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு பக்கா வீடுகள், 10 கோடி குடும்பங்களுக்கு ODFல் இருந்து விடுதலை, 9 கோடிக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு புகையிலிருந்து விடுதலை, 2.5 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு மின்சாரம், 6 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் தரவு அல்ல;ஏழைகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கான சான்று என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா காலத்தில் தேவையான தானியங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், எவ்வித முறைகேடுக்கும் இடமில்லாமல் பணியாற்றி வருவதாகவும் கூறினார். தனது 8 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு தலைகுனிவு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செய்யவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். மாலையில் காலொளில் உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.