IPL 2011: கெயிலை வீழ்த்திய தோனியின் கச்சிதமான ஸ்கெட்ச்; இரண்டாவது கோப்பையை வென்ற சென்னை. #OnThisDay

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது அறிந்தும் தைரியமாக கடலுக்குள் சென்று முத்தெடுத்த கதைதான் 2011-ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நடந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் கெயில் என்ற கரீபிய புயலைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்க சென்னை அணி மட்டும், பரபரப்பான இறுதிப் போட்டியில் மிக எளிதாக அவரை சமாளித்து கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பை வென்ற கையோடு ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றித் தன்னுடைய முத்திரையை மிகவும் ஆழமாக உலக கிரிக்கெட்டில் தோனி பதித்த தினம் இன்று.

Dhoni – Gayle

2011-ம் ஆண்டு ஐ.பி.எல் புதிய வடிவத்துடனே தொடங்கப்பட்டது. புதிய வெற்றிக்கோப்பை, இரண்டு புதிய அணிகள், அரையிறுதி ஆட்டங்களுக்கு பதிலாக பிளே-ஆப்ஸ் வரைமுறை என அத்தனையும் ஐ.பி.எல் களத்திற்கு அத்தனையும் புதியவை. இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் இத்தொடரில் ஒன்று மட்டும் மாறவில்லை அதுதான் சென்னை அணியின் ஆதிக்கம். 2010-ம்- ஆண்டில் ஐ.பி.எல் வெற்றி, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை, 2010 சாம்பியன்ஸ் லீக் தொடர் என்று வரிசையாக வெற்றிகளை அடுக்கிக் கொண்டே இருந்த தோனி, 2011-ம் ஆண்டு தொடரிலும் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குள் கால் எடுத்து வைத்தார்.

புள்ளிப் பட்டியலின் முதலிடத்தில் பெங்களூரு அணி. கிறிஸ் கெயில் மூலம் அந்த ஆண்டு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்திருந்தது ஆர்.சி.பி. முதற்கட்ட ஏலத்தில் எந்த அணியும் கெயிலை எடுக்க முன்வரவில்லை. தொடருக்கு நடுவில் பெங்களூரு அணியின் டிர்க் நானேஸ் காயம் காரணமாக விலக, ஐ.பி.எல் களத்தை அடுத்த சில ஆண்டுகள் தன் பேட்டால் ஆளப்போகிறார் ஒரு ஜமைக்க வீரர் என்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. முதல் போட்டியிலேயே தன் முன்னாள் அணியான கொல்கத்தா அணிக்கு எதிராக சதம் அடித்து தன் வருகையை உலகிற்கு உரக்க அறிவித்தார். அதன் பிறகு அந்த தொடரில் அனைத்து அணிகளுமே அரண்டு போகும் அளவிற்கு அவர் பேட்டிங் இருந்தது. தனி ஒருவனாக ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திருப்பி போடும் அளவிற்கு கெயிலின் பேட்டில் இருந்து ரன் மழை பொழிந்துகொண்டே இருந்தது.

Mike Hussey – Murali VIjay

இப்படி இருக்க வலுவான ஆர்.சி.பி அணியை சென்னை எப்படி சந்திக்கப் போகிறது என்பதுதான் சென்னை ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. வலுகுறைந்த பெங்களூரு அணியை வீழ்த்தி மட்டுமே சென்னை அணியின் தற்போதைய சாம்ராஜ்யம் அமைந்தது கிடையாது. மிக வலுவாக பெங்களூரு அணி இருந்த காலத்திலும் அந்த அணியைத் தோற்கடிப்பதுதான் சென்னைக்கு வாடிக்கை. இது வெறும் பேச்சோடு மட்டும் இல்லாமல் 2011-ம் ஆண்டு முதல் குவாலிபயர் போட்டியில் பெங்களூரை எளிதாக வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை. அதுவும் ஊரே நடுங்கிக் கொண்டிருந்த கெயிலை நம்மூர் அஸ்வினை கொண்டு வீழ்த்தினார் தோனி. பெங்களூரு அணி இரண்டாவது குவாலியர் போட்டியில் மும்பையை வீழ்த்தி மீண்டும் சென்னையுடன் மோத இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை அணியின் விருப்பமான மைதானமான சென்னை சேப்பாக்கத்தில்தான் இறுதி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சேப்பாக்கம் மைதானத்தின் உண்மைத் தன்மையை முழுமையாக அறியாமல் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் போதும் என்ற நம்பிக்கையில் பந்து வீச வந்தார் அந்த அணியின் கேப்டன் வெட்டோரி. சென்னை அணிக்கு முரளி விஜய் மற்றும் மைக் ஹசி துவக்கம் கொடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர்களை சற்று ஒதுக்கிவிட்டு வேகப்பந்து வீச்சை இருவருமே வெளுத்து வாங்கினர். ஸ்ரீநாத் அரவிந்த், முகமது, மிதுன் போன்றோரது பந்துவீச்சு பவுண்டரிகளாக, சிக்சர்களாக நாலாப்பக்கமும் பறந்தன. 15-வது ஓவரில் ஒருவழியாக ஹசி அவுட்டானாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி ரன் ரேட்டை சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

Gayle’s wicket

முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து வெளியேற, அப்போதுதான் வெட்டோரிக்கு இம்மைதானத்தில் சுழற்பந்து வீச்சு மட்டுமே எடுபடும் என்ற ஞானம் வந்தது. கெயிலின் 18-வது ஓவரில் 16 ரன்கள் கொடுத்திருந்தாலும், அவரையே 20வது ஓவர் போட வைத்தார் வெட்டோரி. அதில் மார்க்கல், ரெய்னா என இரண்டு விக்கெட்டுகள் கிடைக்க வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணி. 20 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 205 ரன்கள். சென்னையை வீழ்த்த பெங்களூருவிடம் இருந்த பிரமாண்ட ஆயுதம் கெயில்தான். அந்த பிரமாண்ட ஆயுதத்தை வீழ்த்த சென்னையிடம் இருந்த பிரம்மாஸ்திரம் அஸ்வின். துவக்க வீரராக கெயில் வர முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் தோனி.

கெயில் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை அழகான ஆஃப்-ஸ்பின் பந்துகளாக வீசினார் அஸ்வின். இரண்டு பந்துகளும் கெயிலை விட்டு விலகிச் சென்றன. விலகி செல்லும் மூன்றாவது பந்தை அடிக்க நினைத்தார் கெயில். ஆனால் இம்முறை கச்சிதமாக பந்து அவருக்கு நேராக செல்லும்படியாக வீசினார் அஸ்வின். அதை சரியாக கவனிக்காமல் விட்ட கெயில், பின்னால் இருந்த தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொத்த பெங்களூரு அணியையும் தாங்கிப்பிடித்து வந்த கெயிலை முதல் ஓவரிலேயே வெளியேற்றியது சென்னை அணி.

Suresh Raina – MS Dhoni

அசைக்க முடியாத டைட்டானிக் கப்பலில் பனிப்பாறை ஒன்று மோதி எப்படி சாய்த்ததோ அதேபோல அதிரடியை ஆயுதமாய் வைத்திருந்த பெங்களூரு அணி, தோனி என்னும் பனிப்பாறையில் மோதி நிலைகுலைந்து போனது. கப்பலுக்குள் தண்ணீர் வந்த பிறகு எடுக்கின்ற அத்தனை முயற்சிகளும் வீண் தானே? டிவிலியர்ஸ், கோலி போன்றோரெல்லாம் சிறிது நேரம் சில பவுண்டரிகள் அடித்தாலும் அவை எதுவுமே வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. சென்னையின் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தனர்.

கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர் ஜாகீர்கான் 21 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், பெங்களூரு அணியால் 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் விக்கெட்டுக்கு சென்னை அணி அமைத்த 159 ரன் பார்ட்னர்ஷிப்பைக்கூட பெங்களூருவால் எட்ட முடியவில்லை. தோனி தலைமையிலான சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சென்னையிடம் அந்த ஆண்டு பிளேஆஃப் சுற்றில் வாங்கிய அடியின் காரணமாகவோ என்னவோ இன்றுவரை பிளேஆஃப் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியால் கோப்பையை வெல்லவே முடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.