கேப்டன் மேவரிக்கிற்குப் புதிதாக ஒரு பணி தரப்படுகிறது. அவர் அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதுதான் 36 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் `டாப் கன்’ படத்தின் சீக்குவலான `டாப் கன் மேவரிக்’ படத்தின் ஒன்லைன்.
பீட் மிச்சல் என்கிற டாம் க்ரூஸ் 36 ஆண்டுகள் இந்தப் பணியில் இருந்தும், அவருக்குப் பெரிதாய் எந்தப் பெரிய பதவியோ பொறுப்போ தரப்படவில்லை. தனக்கு எது சரியோ அதைத்தான் செய்வேன் என முஷ்டி முறுக்கும் ஒரு நபரான பீட்டுக்கு எப்படி அமெரிக்க அரசும், அதிகார மையமும் புதிய உயர் பதவிகளை வழங்கும்?! அதில் எல்லாம் பீட்டுக்கும் பெரிதாய் நாட்டமில்லை. உயர் அதிகாரியின் முன், ஜெட்டை மேக் 10 ஸ்பீடில் விண்ணில் சீறிப் பாய வைக்கும் முதல் காட்சியிலேயே பீட் எப்படிப்பட்டவர் என்பதைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார்கள். இப்படியான சூழலில் அவர் செய்யும் ஒரு விஷயம் இன்னும் அவரை சிக்கலில் ஆழ்த்திவிடுகிறது. கடைசி வாய்ப்பாக ஒரு பெரிய மிஷனுக்குச் செல்லவிருக்கும் புதிய படைக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார் பீட். அந்தக் குழு பீட்டின் உதவியுடன் இந்தச் சவாலை திறம்பட செய்து முடித்ததா என்பதை பழைய ஹாலிவுட் பாணியில் அட்டகாசமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜோசஃப் கொசின்ஸ்கி.
நிகழ்காலத்தில் வரக்கூடிய போர் படங்களில் எல்லாம் டிரோன்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில்நுட்பத்தின் வழி பல புதிய விஷயங்களை ஒவ்வொரு நாளும் ராணுவத்தில் அப்கிரேடு செய்துகொண்டே இருக்கிறார்கள். Latitude, Longitude லொக்கேசன்களை சரியாகச் சொல்லிவிட்டால், தானாகவே சென்று தாக்கும் ஏவுகணைகளும் வந்துவிட்டன. ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னர் டாம் க்ரூஸின் படம் வந்தபோது இதெல்லாம் இல்லை. அப்படியெனில் இந்தப் பாகத்தில் இதையெல்லாம் சேர்த்து இன்னும் டெக்னிக்கலாக ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட பாணியிலோ அல்லது டாம் க்ரூஸே நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் பட பாணியிலோ இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கலாம். ஆனால், அதை அறவே தவிர்த்திருக்கிறார்கள். அந்த வகையில்தான் இந்தக் கதை ஈர்க்கவும் செய்கிறது. தொழில்நுட்பத்தின் மாயாஜாலங்கள் செல்லுபடியாகாத ஒரு இடத்தில் நடக்கும் மிஷன் என்பதுதான் இந்தப் படத்தின் முதல் சுவாரஸ்யம்.
மேக் 10 ஸ்பீடில் ஜெட்டை ஓட்டி ‘முடித்து’விட்டு வரும் டாம் க்ரூஸிடம், எட் ஹேரிஸ், “உன்னைப் போன்ற பைலட்களின் காலம் காலாவதியாகிவிட்டது” என்பார். அப்படியெனில் கதையை அடுத்து எப்படி நகர்த்துவது என்னும் போது, முந்தைய பாகத்தின் கதைமாந்தர்களின் நீட்சியாகவே இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள். முந்தைய பாகத்தின் ஐஸ் மேனான வால் கில்மருக்கு இதிலும் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. நிஜ உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும் திறன் இழந்து சினிமாவில் இருந்து விலகி இருந்த வால் கில்மருக்கு எமோசனலாக சில காட்சிகளை எழுதியிருக்கிறார்கள். முந்தைய பாகத்தில் இருந்த நிக் ‘கூஸ்’ பிராட்ஷாவின் மகனாக பிராட்லி ‘ரூஸ்டர்’ பிராட்ஷா என்னும் கதாபாத்திரத்தில் மைல்ஸ் டெல்லர் வருகிறார். கூஸின் இழப்பால் வாடும் ரூஸ்டரை, பீட்டும், பீட் ரூஸ்டரையும் எப்படி அணுகுகிறார்கள் போன்ற காட்சிகள் நல்லதொரு எமோஷனல் எபிசோடு.
பென்னி பெஞ்சமின் என்கிற பெயர் மட்டுமே முதல் பாகத்தில் வரும். அந்தப் பெயருக்கு உருவம் கொடுத்தது போல் ஜெனிஃபர் கொன்னெல்லியை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். பென்னியின் மகள் சொல்லும், “இந்த முறையும் அம்மாவை ஏமாற்றிவிடாதே” என்னும் வசனமே 30 ஆண்டுகளுக்கான கதையைச் சொல்லிவிடுகிறது. பீட்டுக்கும், பென்னிக்கும் இடையே விலகி விலகி, இணையும் காதல் இறுதியில் சேரும்போது, அட்டகாசமான நாஸ்டால்ஜிக் தருணமாக மனதில் பதிகிறது.
இன்னும் சொல்லப் போனால், முதல் பாகமான ‘டாப் கன்’ கூட முழுக்க முழுக்க வான் சாகச படமல்ல. அந்தப் படம் இன்றளவும் நிலைத்து நிற்கக் காரணம், அந்தக் கதை கொண்டு வந்த எமோஷனல் தருணங்கள்தான். அதை இந்தப் படத்தில் இன்னும் அழகாக்கியிருக்கிறார்கள்.
இந்த எமோஷனல் விஷயங்களை மீறியும் டெக்னிக்கல் பிரமாண்டங்கள் நம்மை வியப்படையச் செய்கின்றன. ஆரம்பக் காட்சிகளில் விளையாட்டாய் பறக்கும் வான் ஊர்திகள் திரையில் இடும் கோலங்கள் கேமராவின் மாயத் தருணங்கள். பார்வையாளன் சினிமாவைக் காணும் அகண்ட திரையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு விமானங்கள் செல்வதாய்க் காட்டப்படும் அந்தக் காட்சிகள் அத்தனை சுவாரஸ்யமானவை. ‘லைஃப் ஆஃப் பை’, ‘டுமாரோலேண்ட்’, ‘ஒப்லிவியன்’ உள்ளிட்ட விசுவல் மாயாஜாலங்களை கேமராவின் வழி பார்வையாளனிடம் கடத்திய கிளவ்டியோ மிரண்டாதான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். விண்ணில் புதிய ஜூனியர் சகாக்களை ‘வாத்தி ரெய்டு’ என பீட் தோற்கடிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம ரகம்.
சினிமா எல்லைக்குள் இருந்தாலும், எதிரி இடத்தில் சென்று அங்கு பீட்டும், ரூஸ்டரும் செய்யும் சாகசங்கள் படத்தோடு ஒட்டவில்லை. ஒருவேளை முழுபடத்தையும் எண்பதுகளின் பாதிப்பில் எடுத்தவர்கள், இதையும் அப்படியே எடுக்க முற்பட்டதினால் நிகழ்ந்த தவறோ அது எனத் தெரியவில்லை.
படத்தின் இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். அமெரிக்காவின் தற்போதைய சூழலில், அங்கிருக்கும் அரசியலில் கைத்தட்டல்களைப் பெற எல்லா படத்திலுமே எதிரிக்கு என்றொரு பெயர் நிச்சயம் இருக்கும். அந்தப் பெயர் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட சில நாடுகளையோ, குழுக்களையோ குறிப்பதாய் அமைந்திருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எல்லாம் இடங்களிலும் ‘எனிமி’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் . இதை எல்லா படைப்பாளிகளுமே பின்பற்றினால் சாலச் சிறந்தது.
‘டாப் கன் மேவரிக்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சினிமாவா என்றால், நிச்சயம் இல்லைதான். ஆனால், எமோஷனல் விஷயங்களை ஒரு படத்தில் சரியான விகிதத்தில் காட்டும் போது, எந்தவொரு புதிய பிரமாண்ட தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் அது எட்ட வேண்டிய இலக்கை எட்டிபிடித்துவிடும் என்பதற்கான உதாரணமாக ‘டாப் கன் மேவரிக்’கைச் சொல்லலாம்.
பி.கு.: 1986ம் ஆண்டு மே மாதம் முதல் பாகம் வெளியாகி, பின்னர் 36 ஆண்டுகள் கழித்து, இரண்டாவது பாகமாக அதே மே மாதத்தில் வெளியாகியிருக்கிறது இந்த டாம் க்ரூஸ் திரைப்படம். கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இடைவெளி. இருந்தும் படம் பயங்கர ஹிட். அதே 1986ம் ஆண்டு மே மாதம் வெளியான படம்தான் `விக்ரம்’. அதே 36 ஆண்டுகள் கழித்து இந்த வாரம் வெளியாகவிருக்கிறது கமல்ஹாசனின் புதிய `விக்ரம்’. வரலாறு எப்போதும் ஆச்சர்யமூட்டுவது.