புதுடெல்லி: பருவமழைக்கு முந்தைய நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதால் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மீண்டும் நாடு முழுவதும் மீண்டும் மின் பற்றாக்குறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் நாடு முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லாததே காரணம் என கூறப்பட்டது. ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பல மணி மின் தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழில் நிறுவனங்கள் முடங்கின. இதைத் தொடர்ந்து, ரயில்கள் மூலம் நிலக்கரி விநியோகத்தை விரைவுபடுத்தி ஒன்றிய அரசு நிலைமையை சமாளித்தது.இந்நிலையில், இன்னும் ஒரே மாதத்தில் மீண்டும் அதே போன்ற மின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்ள இருப்பதாக எரிசக்தி மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (சிஆர்இஏ) எச்சரித்துள்ளது. தன்னார்வ அமைப்பான சிஆர்இஏ தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களின்படி, நிலக்கரி அனல்மின் நிலையங்கள், மின் தேவையில் ஏற்படும் சிறிய அளவிலான அதிகரிப்பை கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, நிலக்கரி விநியோகத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது. ஒன்றிய மின்சார ஆணையம் (சிஇஏ) வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் அதிகபட்ச மின் தேவை 214 ஜிகாவாட்டாக இருக்கும் என கணித்துள்ளது. அதோடு, சராசரி மின் தேவை மே மாதத்தில் இருந்த 1 லட்சத்து 33 ஆயிரத்து 426 மில்லியன் யூனிட் என்ற அளவைக் காட்டிலும் அதிகரிக்கக் கூடும் என கூறி உள்ளது. இத்தகைய நிலையில், தென்மேற்கு பருவமழையால் சுரங்களில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுத்து, மின் நிலையங்களுக்கு கொண்டும் செல்லும் பணிகள் தடை படக்கூடும். ஆகவே, பருவமழைக்கு முன் நிலக்கரி கையிருப்பு போதுமான அளவில் வைக்கப்படாவிட்டால், வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் நாடு மீண்டும் ஒரு மின் பற்றாக்குறையை நோக்கி செல்லக்கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிஇஆர்ஏ.வின் ஆய்வாளர் சுனில் தஹியா கூறுகையில், ‘‘நாட்டின் மொத்த சுரங்கத் திறன் 1,500 மெட்ரிக் டன்னாகும். கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 777.26 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது சுரங்கங்களின் உற்பத்தி திறனில் பாதி மட்டுமே. எனவே, நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால், நிலக்கரி சுரங்கங்களால் அதன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்’’ என்றார்.* நிலக்கரி இறக்குமதி செய்ய மாநில அரசுகளுக்கு தடை: – கோல் இந்தியாவே வாங்க அனுமதிகடந்த ஏப்ரலில் பல மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மின் வெட்டு தவிர்க்க முடியாததானது. இப்பிரச்னையை சமாளிக்க, மாநில அரசுகளே, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கு ஒப்பந்தங்கள் கோரியிருந்தன. இவ்வாறு செய்தால் அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அவசர கால ஏற்பாடாக ஒன்றிய அரசின் கோல் இந்தியா நிறுவனமே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளது. எனவே, மாநிலங்கள் கோரியுள்ள ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்குமாறு ஒன்றிய மின்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.* 2020ல் இருந்து குறையும் இருப்புசிஇஆர்ஏ அறிக்கையில், ‘‘தற்போதைய நிலைமை சமீப காலங்களில் தொடங்கியது அல்ல. மே 2020 முதல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், போதுமான நிலக்கரியை இருப்பு வைக்க மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாததே கடந்த ஆண்டு மின் நெருக்கடிக்கு முக்கிய காரணம். பருவமழையால் நிலக்கரிச் சுரங்கங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அவற்றின் உற்பத்தி மற்றும் அனல் மின் நிலையங்களுக்குப் நிலக்கரி கொண்டு செல்தல் தடைபடுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.