அம்பத்தூரில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. விசாரணையில் வெளிவந்த காரணம்!

அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று வெட்டி படுகொலை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அம்பத்தூர் சண்முகபுரம், அன்னை இந்திரா நகர், கோரை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 25). இவர் அம்பத்தூர் காவல் நிலைய பதிவேட்டில் ரெளடி பட்டியலில் இருக்கிறார். இவரது மனைவி சங்கீதா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டாகிறது. 7 மாதத்தில் கவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. உதயகுமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, பாரதியார் நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் உதயகுமார் தனது தாய் லதாவை பார்க்க சண்முகபுரம் சென்றிருக்கிறார். அப்போது அவரை சிலர் பைக்கில் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. இவ்விவரத்தை அவரது நண்பர் அஜித் என்பவர் லதாவிடம் தெரிவித்துள்ளார்.
image
இதனையடுத்து அன்று இரவு லதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலமாக தீவிர விசாரணை நடத்தியதில் உதயகுமாரை சிலர் கடத்திச் சென்று அதே பகுதி சிவப்பிரகாசம் நகர், தாமரைகுளம் அருகே முட்புதரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து இருந்தது தெரியவந்தது.
தொடர்புடைய செய்தி: அம்பத்தூரில் இளைஞரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த கும்பல் – வெளியான சிசிடிவி காட்சிகள்!
CCTV-footages-released-of-Youth-murdered-by-a-gang-at-Ambattur
பின்னர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், உதயகுமாரின் நண்பர் ஜீவா (வயது 26) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ், லாரன்ஸ், எலியா சாமுவேல் ஆகியோர் கடந்த மாதம் 18ஆம் தேதி தாக்கியுள்ளனர். இதனை அறிந்த உதயகுமார் மோசஸ் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் ராஜலட்சுமியிடம் தட்டிக் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து விரோதம் காரணமாக மோசஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
image
இதையடுத்து தலைமறைவாக இருந்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அப்புன் என்ற பூவராகவன்(36), சரண் (20), ராமமூர்த்தி (22), மாரிஸ் (20), பிராங்கிளின்(23), முகுந்தன் (20), எலியா சாமுவேல் (20) மாணிக்கம் (24), வினோத்குமார் (40) ஆகிய 9 பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
image
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக மோசஸ், எலியாஸ், லாரன்ஸ் ஆகிய மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.