பிரபல நடிகை ஒருவர் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்குமாறு பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்திருந்தார் என முன்னாள் அமைச்சரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆதரவாளர்களை தூண்டிவிட்ட அரசியல் தலைவர்கள்
அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்திருந்த நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மக்கள் அலரிமாளிகைக்கு வந்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தூண்டிவிட சில அரசியல் தலைவர்கள் தலையிட்டமை வெளிப்படையாகும். அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் செய்த தவறாகவே நான் பார்க்கிறேன்.
மனிதாபிமானமற்ற தண்டனை
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்த முயற்சித்ததால் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
அலரிமாளிகை கூட்டத்திற்கு மக்களை அழைத்து வந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதுடன், அதில் கலந்து கொண்டவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலரால் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு மனிதாபிமானமற்ற தண்டனை வழங்கப்பட்டது. முதலில் எங்கள் தரப்பில் தவறு நடந்திருந்தால், எங்கள் கட்சி ஆதரவாளர்கள் மீதான எதிர்த்தாக்குதல் அதை விட நூறு மடங்கு மோசமானது.
உண்மையில், அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் அந்த இடங்களிலேயே முடிந்திருக்க வேண்டும்.
அந்தச் சம்பவங்களை சாக்காக வைத்து வன்முறைக் கும்பல் 70 க்கும் மேற்பட்ட ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு தீவைத்துள்ளது.
மேலும், மாகாண அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் 600 முதல் 700 வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.
திட்டமிடப்பட்ட தாக்குதல்
அந்தக் கும்பல்களால் தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஜே.வி.பியின் சில தலைவர்கள், எல்லா இடங்களிலும் தாக்குதல்களை நடத்துவதற்கு விரைவாக செய்திகளை வழங்கியதாக சமூக ஊடகங்களில் கூறுவதை நாம் காண முடிந்தது.
அதேபோன்று பிரபல நடிகை ஒருவர் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்குமாறு பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அரசியல்வாதிகளின் வீடுகளை அழித்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தாக்கியவர்கள் இப்போதும் அவர்கள் செய்ததை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கூட அந்தப் கும்பல்களின் தாக்குதல்கள் பற்றி பேசுவதில்லை அது மிகவும் தவறானது.
நாங்கள் செய்த தவறை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், எமது ஆதரவாளர்களைத் தாக்கி எமது அரசியல்வாதிகளின் சொத்துகளை அழித்தவர்கள் செய்த தவறு அதை விடப் பாரதூரமானது என குறிப்பிட்டுள்ளார்.