அறிவாலயத்தில் கையூட்டு பெறுவதாக பேசுவதா? அண்ணாமலையை கண்டித்து ஊடகத் துறையினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர் ஒருவர் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்கு பா.ஜ.க சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, கேள்வி கேட்டவரை நோக்கி உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்.. அறிவாலயத்தில் வாங்கிக் கொள்ளலாம் என ஆரம்பித்து படிப்படியாக ரூ.3000 வரை வாங்கிக்கொள்ளலாம் என அவமதிக்கும் வகையில் பேசினார். இதற்கு பல தரப்பினரிமும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, “ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த பத்திரிகையாளர் விரோத – அவதூறு போக்கைக் கண்டித்தும் , தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் அண்ணாமலை, தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுப் படுத்தும் செயலையைும் கருத்துரிமைக்கு எதிரான போக்கையும் கண்டித்தும் திங்கட்கிழமை (30-05-2022) மாலை 4.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை கற்றுக் கொள்ள கண்டனக்குரல்கள் மூலம் அறிவுறுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.