புதுடில்லி: ஆதார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், அதன் நகலை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், மாஸ்க்டு(மறைக்கப்பட்ட) ஆதார் கார்டு நகலை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிக்கையை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ள மத்திய அரசு, ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொது மக்கள் அனைவரும், தங்களின் ஆதார் கார்டு நகலை எந்தவொரு நிறுவனம் மற்றும் அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது, ஒருவேளை தவறாக பயன்படுத்தபட வாய்ப்பு உள்ளது. இதற்கு பதில், ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை மட்டும் காண்பிக்கும் மாஸ்க்குடு ஆதார் கார்டை பயன்படுத்தலாம். இதனை யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in. பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள சென்டர்களில், பொது கணினிகளில் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரு வேலை பதிவிறக்கம் செய்தால், அதனை நிரந்தரமாக அழிப்பதை உறுதி செய்ய வேண்டும். யுஐடிஏஐ., அமைப்பிடம் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே, தகவலுக்காக ஒரு நபரின் ஆதாரை பயன்படுத்த முடியும்.
ஓட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட உரிமம் பெறாத நிறுவனங்கள் ஆதார் அட்டை நகல்களை சேகரிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதியில்லை. அவ்வாறு செய்தால், அது அதார் சட்டத்தின் கீழ் குற்றமகும். எந்தவொரு தனியார் நிறுவனமும் ஆதார் கார்டை பார்க்க விரும்பினாலோ அல்லது நகலை பெற விரும்பினாலோ, அந்த நிறுவனம் உரிமம் பெற்றுள்ளதா என்பதை யுஐடிஏஐ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வாபஸ்
இந்நிலையில்,மத்திய அரசு வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் கவனமாகவும், விவேகத்தை கடைபிடிக்க வேண்டும். தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement