இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆதார் நகலைப் பல தேவைகளின் பொருட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதில் பாதுகாப்பு இல்லை என எச்சரித்துள்ளது.
நீங்கள் அளிக்கும் ஆதார் நகலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் ஆதார் நகல் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி அளிக்கும் பட்சத்தில் இறுதி நான்கு இலக்கங்கள் தவிர மற்ற ஆதார் எண் இலக்கங்களை மறைத்துக் கொடுக்க வேண்டும். மறைக்கப்பட்ட ஆதார் அட்டை, ஆதார் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதில் அறிவுறுத்தப்பட்டதுபோல் இலக்கங்கள் மறைக்கப்பட்டு இருக்கும்.
ஆதார் அட்டையைப் பாதுகாப்பு இல்லாத கணினி வழி தரவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுக் கணினி மையத்தில் தரவிறக்க செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடியாதபட்சத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்த நகலை முழுமதுமாக நீக்கச் சொல்ல வேண்டும். அது நீக்கப்பட்டுவிட்டதா என்பதையும் நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
ஆதார் அட்டையில் நம்முடைய கைரேகை உட்பட நம்மைக் குறித்த முழுமையான தகவல் அடங்கியுள்ளது. அதனால் அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த எச்சரிக்கையை அமைச்சகம் விடுத்துள்ளது. பொதுவாக தங்கும் விடுதிகளில் ஆதார் நகல் கேட்பது பொது நடைமுறை. ஆனால், இப்போது ஆதார் அமைப்பின் அங்கீகாரம் இல்லாத தங்கும் விடுதிகளுக்கு இம்மாதிரி ஆதார் நகல் கேட்கும் அதிகாரம் இல்லை என அந்தக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.