சென்னை: தமிழக முதல்வரை பொருத்தவரையில், ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்ற பிரிவினை இல்லை, அவருக்கு எல்லோரும் சமம். ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லாதவர் என்று இந்துசமய அறநியைத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் இன்று, தொண்டர் சீர்புராணம் தெய்வச் சேக்கிழார் விழா இன்று (மே 29) நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியது:
” இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழக முதல்வரை பொருத்தவரையில்,ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்ற பிரிவினை இல்லை. முதல்வருக்கு எல்லோரும் சமம்.
ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லாதவர்.
அந்த வகையில் இந்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரத்தை, 5 ஆண்டுகள் நிறைவுபெறும்போது பார்த்தால், இந்துசமய அறநிலையத்துறை 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு இந்துசமய அறநிலையத்துறைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிதான் பொற்காலம் என்று வரலாற்றில் பதியப்படுகின்ற அளவிற்கு திட்டங்களை தீட்டி தருகிறார் என்று அவர் கூறினார்.