கொல்கத்தா: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகி உள்ளது. கரோனா தொற்று காலமாக ரயில் சேவை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ரயில்வே சார்பில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வங்கதேச நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனை கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பந்தன் எக்ஸ்பிரஸ், மைத்ரி எக்ஸ்பிரஸ் என இரண்டு பயணிகள் ரயில் இரு நாடுகளுக்கு இடையிலும் இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மிதாலி எக்ஸ்பிரஸ் சேவையும் இருநாடுகளுக்கு இடையிலும் தொடங்கப்பட உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்த ரயில்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பேருந்து மற்றும் விமான போக்குவரத்தை காட்டிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை மக்கள் அதிகம் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இதன் கட்டணம் மற்றும் நேர அட்டவணை தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் சுமார் 450 பயணிகள் வரை பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வடக்கு மேற்கு வங்கத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.