ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க-வையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஒருசேர கடுமையாகச் சாடியிருக்கிறார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி, “இந்தியாவானது என்னுடையது அல்ல. இது தாக்கரேவுக்கும் சொந்தமில்லை, மோடி-ஷாவுக்கும் சொந்தமில்லை. ஒருவேளை இந்தியா யாருக்காவது சொந்தம் எனில், அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் சொந்தம். முகலாயர்களுக்கு பிறகுதான், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ம் கூட. ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலிருந்து மக்கள் இங்கு குடியேறிய பிறகுதான் இந்தியா உருவானது.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். இதே நிலை நீடிக்குமானால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்றவை மதச்சார்பற்ற கட்சிகள், அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், முஸ்லிம் கட்சிக்காரர் யாராவது சிறைக்குச் சென்றால் அவர்களுக்கு பரவாயில்லை” என்றார்.