எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தப் பெண்ணையும் தொழிற்சாலைகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 27 அன்று உத்தரபிரதேச அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒரு பெண் இரவில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார் என்றால், அவர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிற்சாலைகளுக்கு உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்…
1. எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தக்கூடாது.
2. எந்தப் பெண்ணும் இரவு நேரங்களில் வேலை செய்ய மறுத்தால் அவர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது.
3. இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரியும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்திற்கு வருவதற்கும் செல்வதற்கும் போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும்.
4. இரவில் பணிபுரியும் பெண்களுக்கு உணவு மற்றும் போதுமான கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும்.
5. அவர்களுக்கு கழிவறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் வழங்கப்பட வேண்டும்.
6. மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை, குறைந்தபட்சம் நான்கு பெண்களாவது அந்த வளாகத்தில் வேலை செய்ய வேண்டும்.
7. பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களை விட மூன்று மடங்கு அதிகமான ஆண்கள் வேலையில் உள்ளனர். வேலை செய்யும் பெண்களின் சதவீதம் குறைவாக உள்ள மாநிலங்களில் பீகார் (14 சதவீதம்), உத்தரபிரதேசம் (17 சதவீதம்), அசாம் (18 சதவீதம்) ஆகியவை உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM