உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.க வெற்றிபெற்றதையடுத்து, யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறை முதல்வராகப் பதவியேற்றார். நிர்வாக ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் யோகி ஆதித்யநாத் தற்போது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச தொழிலாளர் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெண் தொழிலாளர்களை, மாலை 7 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை கட்டாயபணி செய்ய வைப்பதற்கு நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் பெண்கள், அவர்களின் விருப்பத்தின்பேரில் நைட் ஷிஃப்ட் வேலை செய்யலாமே தவிர, அவர்களை நிறுவனங்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது.
அதேபோல, நைட் ஷிஃப்ட் பணிக்கு வராத பெண் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் கூடாது. மேலும், பணியின்போது பெண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், உடனடியாக தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளூர் காவல் நிலையத்துக்குப் புகாரளிக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், தங்களின் விருப்பத்தின்பேரில், நைட் ஷிஃப்ட் பணிக்குவரும் பெண்களுக்கு, இலவசப் போக்குவரத்து, இலவச உணவு மற்றும் முறையான பாதுகாப்பு ஆகியவற்றை அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.