கொரோனா பரவல் குறைந்ததையடுத்து,
திருப்பதி
ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
செய்து வருகிறது. குறிப்பாக வார இறுதியில் அதிக கூட்டம் வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாக திருமலை தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பதியில் தினமும் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் 70,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனாலும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்களை தங்கவைக்கும் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் நிரம்பி வழிவதால், பகதர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், திருமலைக்கு வரும் பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.