சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த ஆறு வழக்கறிஞர்களில், நான்கு பேருக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸூக்கு தகவல் கிடைத்துள்ளன.
2022 பிப்ரவரி 16 அன்று, தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான கொலிஜியம் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நிடுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீது, ஆர். ஜான் சத்யன் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது. இந்த பெயர்கள் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தால் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2022 அன்று, சட்டத் துறை மாலா, சவுந்தர் ஆகிய இருவருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், பாபு மற்றும் மோகன் ஆகிய இருவருக்கும் கூடுதலாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தி சண்டே எக்ஸ்பிரஸூக்கு தகவல் கிடைத்துள்ளன. ஹமீத், சத்யன் ஆகியோரின் பரிந்துரை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு பெயர்களில் அரசுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமாக பரிந்துரை திருப்பி அனுப்பப்படவில்லை. அவை நிலுவையில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலிஜியத்தில் இந்திய தலைமை நீதிபதி, நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பு பணியாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஹமீத் மற்றும் சத்யன் ஆகியோருக்கு நல்ல ரீவ்யூவுடன் தான் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஹமீத், AAV பார்ட்னர்ஸ் என்ற சட்ட நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். அவர், மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு ஜூனியராக பணியாற்றியுள்ளார்.
சென்னையில் முன்னணி குற்றவியல் வழக்கறிஞரான சத்யன், விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1997 இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
2016-2017 ஆம் ஆண்டில் கூட, சத்யன் உயர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் பணியாற்ற அனுமதிக்கிறது. ஆனால், தற்போது 60 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
தற்போது 2 வழக்கறிஞரின் பெயர் நிலுவையிலுள்ள விவகாரத்தை, நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை வேட்பாளரான சி இமாலியாஸ் வழக்கில் நடந்தது போல் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். 2016ல், அப்போதைய கூடுதல் அரசு வக்கீல் சி. இமாலியாஸின் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட எமலியாஸின் பெயரை, 2017 இல், மற்ற எட்டு பெயர்களுடன் சேர்ந்து உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
2018 இல், கொலிஜியம், துவா அசோசியேட்ஸின் கூட்டாளராக இருந்த செந்தில் குமார் ராமமூர்த்தியின் பரிந்துரையுடன் எமலியாஸின் பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தியது.
2019 இல், ராமமூர்த்தி நியமிக்கப்பட்டார். ஆனால் எமலியாஸ் நியமிக்கப்படவில்லை. பின்னர் அவர் மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.