அகமதாபாத்:
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.