சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் 6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் பிரம்மகுமாரிகள் சமாஜமும், ரேலா மருத்துவமனையும் இணைந்து உலக புகையிலை நாள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்தப்பட்டது. இந்த நடைபயணத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 29) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: 1987 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி உலக புகையிலை விழிப்புணர்வு தினமாக அன்றிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்த அளவில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி போதைப் பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா போன்ற பல்வேறு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2013 மே 23 தொடங்கி 2021 மே 23 வரை இதுவரை ஒன்பது ஆண்டுகள் 799.81 டன் போதைப் பொருட்கள் காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்று சட்டமன்றத்தில் பேசியதை அனைவரும் அறிவார்கள். கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவரின் அறிவுறுத்தலின்படி போதைப் பொருட்களை ஒழிக்க மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு ஒரு கூட்டத்தை நடத்தி தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
அந்தவகையில் ஓராண்டு காலத்திற்கு மட்டும் 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூபாய் 6 கோடியே 80 லட்சம். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 3063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டிருக்கிறது. 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.
அது தற்போது கட்டுக்குள் இருக்கிறது என்றாலும் மக்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு அதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நிகழ்ச்சி சிறப்பான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.