காங்கிரஸ் தலைவர், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொலை; பகவந்த் மான் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவரும் பஞ்சாபி பாடகருமான சுப்தீப் சிங் சித்து மூஸ் வாலா ஞாயிற்றுக்கிழமை மான்சா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜவஹர் கே கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகில் அவர் மீது குறைந்தபட்சம் 10 முறை சுடப்பட்டதாகவும், அவர் மான்சாவில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட ஒரு நாள் கழித்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். விஐபி கலாச்சாரத்தை முறியடிக்கும் பகவந்த் மான் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட 424 விஐபிக்களில் சித்து மூஸ் வாலாவும் ஒருவர்.

மான்சா அருகே உள்ள மூஸ் வாலா கிராமத்தைச் சேர்ந்த சித்து மூஸ் வாலா கடந்த சில ஆண்டுகளில் பல சூப்பர்ஹிட் பஞ்சாபி பாடல்களைப் பாடியவர். மூஸ் வாலா காங்கிரஸ் சார்பில் மான்சா தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை ஆம் ஆத்மி கட்சியின் டாக்டர் விஜய் சிங்லா 63,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் சித்து மூஸ் வாலா காங்கிரஸில் இணைந்தார். மான்சா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் அவருக்குச் சீட்டு கொடுத்ததால் அப்போதைய மான்சா எம்எல்ஏவான நாசர் சிங் மன்ஷாஹியா, சர்ச்சைக்குரிய பாடகரின் வேட்புமனுவை எதிர்ப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.

மூஸ் வாலாவின் மரணம் குறித்த செய்தி வெளியான உடனேயே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவரும் திறமையான கலைஞருமான சித்து மூஸ்வாலாவின் கொலையால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உலகம் முழுவதும் உள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அனைவரும் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்று கூறினார். “சித்து மூஸ் வாலாவின் கொடூரமான கொலையால் நான் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளேன்.. எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது… எனது இதயப்பூர்வமான அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுடனும் இருக்கும்… அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்தார்.

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் உறுப்பினருமான சித்து மூஸ்வாலா பஞ்சாப் மாநிலத்தில் மான்சாவில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அனைவரும் அமைதி காக்குமாறு ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

“சித்து மூஸ் வாலாவின் கொலை வருத்தம் அளிக்கிறது. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் பேசினேன். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். நீங்கள் அனைவரும் உறுதியுடன் இருந்து அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடவுள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பு கவசங்கள் திரும்பப் பெறப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்களில் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். இது போன்ற முதல் உத்தரவு மார்ச் 12 ஆம் தேதி வந்தது. சமீபத்திய உத்தரவு மே 28 ஆம் தேதி வந்தது. சில பிரிவினர், இந்த விஐபி கலாச்சாரத்தின் மீதான ஒடுக்குமுறையை பாராட்டினாலும், மற்றவர்கள் இந்த நடவடிக்கை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக தங்கள் பாதுகாப்பை இழந்தவர்களின் பெயர்கள் பொதுவில் பகிரப்பட்டது.

பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, சித்து மூஸ் வாலாவின் கொலைக்கு கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் மீது குற்றம் சாட்டினார்.

“சித்து மூஸ் வாலா ஒரு முக்கிய பாடகர். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோரின் கேவலமான அரசியலால், அவர் கடுமையாக தாக்கப்பட்டார், அதில் அவர் உயிர் இழந்தார். முதலில், அவர்கள் பிரபலங்களின் பாதுகாப்பை விலக்கி, பின்னர் அவர்களின் பெயர்களை வெளியிடுகிறார்கள். இது ஆபத்தானது என்று நான் எச்சரித்தேன்” என்று மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார்.

பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, சனிக்கிழமையன்று, பஞ்சாப் காவல்துறையால் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளப்பட்ட அல்லது பாதுகாப்பு குறைக்கப்பட்ட நபர்களின் பட்டியல் கொண்ட ஆவணத்தின் இரண்டு பக்கங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த ஆவணம் ரகசியமாக இருந்தும் கசிந்துள்ளதாகவும், பட்டியலில் பெயர் உள்ளவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.